MK Stalin: ஆளுநர் சர்ச்சை விவகாரம்; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..? முதலமைச்சர் அவசர ஆலோசனை..!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரது பெயர்களை தவிர்த்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது அவையில் இருந்து பாதியிலே ஆளுநர் வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இன்று ஆளுநர் உரையில் ஆளுநர் பல்வேறு முக்கிய அம்சங்களை தவிர்த்து, பாதியிலேயே வெளியேறியது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஆளுநர் உரை:
முன்னதாக, ஜனவரி 9-ந் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் ஆளுநர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தயாரித்து தந்த ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய வாசகங்களை ஆளுநர் புறக்கணித்தார். மேலும், உரையில் இடம்பெற்றிருந்த திராவிட மாடல், அண்ணல் அம்பேத்கர், பெரியார், கருணாநிதி, காமராஜர் போன்ற வார்த்தைகளை அவர் படிக்காமல் புறக்கணித்தார். அவரது இந்த செயல் சட்டமன்றத்தில் இருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆளுநர் - தமிழ்நாடு அரசு:
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ,.க்கள் பேரவையிலே ஆளுநர் முன் கண்டனங்களை எழுப்பியதுடன் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசிக்கொண்டு இருந்தபோது ஆளுநர் பாதியிலே வெளியேறினார். அவரது இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அவருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழ்நாடு, சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆளுநரின் கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.