DMK Congress: அடம்பிடிக்கும் கை.. அதிக தொகுதி கேட்கும் காங்கிரஸ் - என்னதான் காரணம்?
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசியல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கான பணிகளில் தமிழக அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றனர். பலமான கூட்டணியாக உள்ள திமுக ஆட்சியைத் தக்கவைப்பதற்காகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அதிமுக-வும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மற்றொரு பக்கம் தவெக, நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
அதிக தொகுதிக்கு அடம்பிடிக்கும் காங்கிரஸ்:
இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் அதிக தொகுதிகளை கேட்போம் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். திமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள மிகப்பெரிய தேசிய கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆனாலும், தமிழ்நாட்டில் அவர்களது செல்வாக்கு பெரியளவில் இல்லை. ஆனாலும், அவர்கள் அதிக தொகுதிகள் கேட்பதன் பின்னணியில் பல காரணங்கள் உள்ளது.
என்ன காரணம்?
கடந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுக்கு 25 தொகுதிகள் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய 2016 தேர்தலில் வெறும் 8 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் காரணமாக வரும் தேர்தலில் அதிக தொகுதிகளில் பாேட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது.
இதைக் காட்டிலும் காங்கிரஸ் அதிக தொகுதிகளை கேட்பதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் விஜய். அரசியல் கட்சி தொடங்கியது முதலே விஜய் பலருக்கும் கூட்டணி அழைப்பு விடுத்தும் யாரும் முன்வரவில்லை. திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து அவர் இதுவரை முன்வரவில்லை. மேலும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விஜய்யின் டீல் காங்கிரசை கவர்ந்தாலும் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் திமுக கூட்டணியை விட்டு வெளியேறக்கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், சிலர் விஜய் கூட்டணி பக்கம் செல்ல வலியுறுத்தி வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திமுக-விடம் அதிக தொகுதிகளை கேட்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு:
அதன் எதிரொலியாகவே தற்போது காங்கிரஸ் தரப்பினர் அதிக தொகுதிகள் வேண்டும் வெளிப்படையாகவே பேட்டி அளித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் திமுக கூட்டணியில் நீண்ட காலம் அங்கம் வகித்து வருகிறோம், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பது அனைத்து காங்கிரஸ்காரர்களின் கனவாக இருக்கும்.
கூடுதல் தொகுதிகள் கேட்போம் என நேற்று பேட்டி அளித்தார். மேலும், இந்த தேர்தலில் அதிக தொகுதிகள் கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பிக்களும் கட்சித் தலைமையை வலியுறுத்தியுள்ளனர்.
திமுக-வின் முடிவு என்ன?
காங்கிரஸின் கோரிக்கையை திமுக ஏற்குமா? அல்லது திமுக ஒதுக்கும் தொகுதியை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுமா? அல்லது தொகுதி பங்கீடு விவகாரம் கூட்டணியை பாதிக்குமா? என்பதை எதிர்காலமே தீர்மானிக்க உள்ளது. காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என மிகப்பெரிய கூட்டணி பட்டாளத்தை வைத்துள்ள திமுக தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்வதில் சவால் இருந்தாலும், தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





















