கோயில் யானை தாக்கி இருவர் உயிரிழப்பு; வனசரக அலுவலர் சொன்ன காரணம் என்ன?
திருச்செந்தூர் கோயிலில் யானை மிதித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் வனசரக அலுவலர்கள் அளித்துள்ள விளக்கத்தை இங்கே காணலாம்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர். யானைக்கு மதம் பிடிக்கவில்லை என்றும் யானை அருலில் செல்ஃபி எடுத்தது அதை தொந்தரவு செய்வதாக அமைந்ததாக வனசரக அலுவலர் விளக்கம் அளித்துள்ளார்.
யானை தாக்கி இருவர் உயிரிழப்பு:
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக சொல்லப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஏராளமானோர் சென்று வழிபாடு செய்வதுண்டு. இக்கோயிலில் தெய்வானை (26) என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானை யானையிடம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆசி பெறுவது.
திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார் (45) என்பவர் தெய்வானை யானையின் உதவி பாகனாக இருந்தார். உதயகுமார் மற்றும் அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பாறசாலை பழகலை சேர்ந்த கிருஷ்ண நாயர் மகன் சிசுபாலன் (58) ஆகிய இருவரும் இன்று (18.11.2024) மாலை 3.10 மணியளவில் யானை அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென தெய்வானை யானை சிசுபாலனை தாக்கியுள்ளது. சிவபாலனைக் காப்பறுவதற்காக உதயகுமார் யானைக்கு அருகில் சென்றுள்ளார். தெய்வானை இருவரையும் யானை சரமாரியாக தாக்கியுள்ளது. இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யானை பாகனான உதயகுமார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சைப்பலனின்றி அங்கேயே உயிரிழந்தார்.
2 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து 45 நிமிடங்கள் கோயில் நடை சாத்தப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இந்த துயர சம்பவம் நடைபெற்றதையடுத்து திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்ற பின் கோயில் நடை திறக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் தலைமையில், திருச்செந்தூர் வனசரக அலுவலர் கவின் உள்ளிட்ட வனத்துறையினர், டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையிலான காவல் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், பொன்ராஜ், அருண் உள்ளிட்ட கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை பரிசோதனை செய்தனர்.இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
செல்ஃபி காரணமா? விளக்கம் அளித்த வனசரக அதிகாரி
யானைக்கு திடீரென ஆக்ரோஷம் ஏற்பட்டது ஏன் என்பது தொடர்பாகவும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக முழுமையான ஆய்வு மற்றும் விசாரணைக்கு பிறகு முழு அறிக்கை வெளியிடப்படும் என மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் தெரிவித்துள்ளார்.
வன அலுவலர் ரேவதி ரமன் செய்தியாளர்கள் கேட்க கேள்விக்குப் பதில் அளிக்கையில், ”தெய்வானை பெண் யானை. மதம் பிடிக்க வாய்ப்பு இல்லை. ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காரணம் குறித்து விரைவில் ஆய்வு செய்து அறிக்கை தருகிறோம்.ம. காட்டு விலங்குகளின் மனநிலையை அறிவது, கணிப்பது சாத்தியம் அல்ல. கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. தற்போது யானை அமைதியாகவே உள்ளது. விரிவான விசாரணைக்குப் பிறகு மேலதிக விபரங்களை தெரிவிக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக விளக்கம் அளித்த வனசரக அலுவலர் கவின் தெரிவிக்கையில், ”பாகனின் உறவினர் சிசுபாலன் தெய்வானை யானை அருகில் நின்று நீண்ட நேரம் செல்ஃபி எடுத்துள்ளார். செல்ஃபியால் ஆத்திரமடைந்து சிசுபாலனை யானை கால் மற்றும் தும்பிக்கையால் தாக்கியுள்ளது; சிசுபாலனை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது.