Dowri Crime: "70 சவரன் நகை போட்டும் பத்தல.." வரதட்சணை கொடுமையால் பறிபோன இளம்பெண் உயிர்..? தூத்துக்குடியில் துயரம்..!
தூத்துக்குடியில் திருமணமான ஓராண்டிற்குள்ளாகவே வரதட்சணை கொடுமையால், இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி லயன் ஸ்டவுன் பகுதியை சேர்ந்த பிரசாத் என்பவர் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி தெற்கு எம்பரர் தெரு பகுதியை சேர்ந்த கில்பர்ட் என்பவரது மகளும், பட்டதாரியுமான அனுஷாவிற்கும், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
70 சவரன் நகை:
இந்த திருமணத்திற்காக பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில், பெண் வீட்டாரிடம் 100 சவரன் நகை மற்றும் 4 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையாக கேட்டுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த கில்பர்ட், திருமணத்தின் போது தனது மகளுக்கு 70 சவரன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை வரதட்சணையில் முதல் தவணையாக கொடுத்துள்ளார். மீதி 30 சவரன் நகையை சில மாதங்களில் கொடுத்து விடுவதாக கில்பர்ட் உறுதியளித்துள்ளார்.
வரதட்சணை கொடுமை:
திருமணம் ஆகியும் சில மாதங்கள் ஆகியும், கில்பர்ட் சொன்னபடி 30 சவரன் நகையை போடவில்லை என கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, திருமணத்திற்கு முன்பு அளித்த உறுதியின்படி, நகையை முறையாக போடாததால் அனிஷாவை பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். பிரசாத் வேலைக்காக மீண்டும் குவைத்திற்கு செல்ல, அவரது குடும்பத்தினர் அனிஷாவை பல்வேறு விதங்களில் கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.
அதன்படி, அனிஷாவை கடந்த ஓராண்டாக தனது தாய் வீட்டிற்கு அனுப்பாமல் இருந்துள்ளனர். செல்போனில் மற்றவருடன் தொடர்பு கொள்ள முடியாதபடி தடை விதித்துள்ளனர். அனிஷாவிற்கு பிரசாத்தின் குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும் அனிஷாவின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அனிஷா மரணம்:
இந்நிலையில் தான், குவைத்தில் வேலை பார்த்து வந்த பிரசாத் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, மீண்டும் சொந்த ஊருக்கு வந்தார். அதைதொடர்ந்து, மீண்டும் 30 சவரன் நகை மற்றும் பணம் கேட்டு அனிஷாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. திடீரென, அனிஷாவின் தந்தை கில்பட்டிற்கு நேற்று மாலை பிரசாத் போன் மூலம் தொடர்புகொண்டு, உங்களது மகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, முழு விவரம் தெரியாமல் மருத்துவமனைக்கு கில்பர்ட் மற்றும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது தான், அனிஷா இறந்துவிட்ட தகவலை பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை:
இதனால் ஆத்திரமடைந்த கில்பர்ட், தனது மகளை வரதட்சணை கொடுமை காரணமாக பிரசாத் மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினர் கொலை செய்து விட்டதாக தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில், தென்பாகம் காவல்துறையினர் பிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ஆர்டிஒ விசாரணை:
அனிஷா மற்றும் பிரசாத்திற்கு திருமணம் ஆகி ஓராண்டு கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், அனிஷா மர்மமான முறையில் இறந்துள்ளதால், தூத்துக்குடி ஆர்டிஒ இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார். வரதட்சணை கொடுமை காரணமாக பட்டதாரி இளம்பெண் தூத்துக்குடியில் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.