Minister M Subramanian: தமிழகத்தில் மத்திய அரசின் கலந்தாய்வுக்கு முற்றுப்புள்ளி! - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
இந்தாண்டு ஒரே நேரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் கலந்தாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஒரே நேரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் கலந்தாய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மாணவர்களுக்கான நீட் கவுன்சிலிங்கை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ”மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் மூலம் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை 104 என்ற மையத்தில் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு கடந்த 07.05.2023 அன்று நடைபெற்றது. இதில் 1,44,516 தமிழ்நாட்டு மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதற்கட்டமாக பள்ளி கல்வித்துறை இடமிருந்து நீட் தேர்வு எழுதிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற 7,442 மாணவர்களின் பெயர் பட்டியல் பெறப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மனநல ஆலோசனை சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 14 உதவி மையத்திலிருந்து 20 மனநல ஆலோசகர்களின் மூலம் தொலைபேசி வாயிலாக மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 1,44,783 மாணவர்கள் பதிவு செய்தனர் 1,44,516 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 78,693 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். 68,823 தேர்ச்சி பெறவில்லை அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் நான்கு இடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சியிருக்கிறது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மன மகிழ்ச்சியை தருகிறது. எதிர்காலத்தில் கூடுதலாக சாதிப்பதற்கான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள இந்த தேர்வின் முடிவில் தெரியவந்திருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”தமிழகத்தில் இந்தாண்டு மத்திய அரசின் கலந்தாய்வு என்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தாண்டு ஒரே நேரத்தில் மத்திய அரசும் மாநில அரசும் கலந்தாய்வு மேற்கொள்ளலாம் என்று இருக்கிறோம். நீட் தேர்வு சட்டமசோதா உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் உயர்கல்வித் துறையில் சில விளக்கங்களை கேட்டுள்ளது. அதற்கு விரைவில் பதில் அளிக்கப்பட உள்ளது. கடந்த காலங்களை போல் நிராகரிக்கப்படாமல், சில விளக்கங்களை கேட்டிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது” என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். தினசரி ஓமந்தூரார் மருத்துவமனையில் நடக்கும் சிகிச்சைகளில் எந்த பாதிப்பும் இல்லை” என தெளிவுபடுத்தியுள்ளார்.