Tiruvannamalai Local holiday: திருவண்ணாமலை தீபத்திருவிழா; டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!
Tiruvannamalai Local holiday: திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி மட்டும் விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு வரும் டிசம்பர் 6ஆம் தேதி மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அன்றைய தினம், மத்திய, மாநில அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உட்பட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அவற்றில் மருத்துவமனை, வங்கி, காவல் நிலையம், தபால் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை தீபம் என்றாலே கொண்டாட்டம் தான். உலக பிரசித்தி பெற்ற திருத்தலமாகவும் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழா ஆகும். கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறும். துர்க்கை அம்மன் உற்சவம் கொடியேற்றத்திற்கு முந்தைய 3 நாட்கள் காவல் தெய்வங்கள் உற்சவம் நடைபெற்றது. அதாவது, 24-ந் தேதி (வியாழக்கிழமை) துர்க்கை அம்மன் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அன்று இரவு திருவண்ணாமலை சின்னக்கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு காமதேனு வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கோயில் வளாகத்தில் உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் பிடாரி அம்மன் உற்சவம் நடைபெறும். அன்று அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து 26-ந் தேதி (சனிக்கிழமை) மூஷிக வாகனத்தில் விநாயகரும், ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதி உலா நடைபெற்றது. முதல் நாள் விழாவின் போது காலை மற்றும் இரவில் விநாயகர், வள்ளி தெய்வானையும் சுப்பிரமணியர், உண்ணாமலை அம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது. மற்ற நாட்களில் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும். தொடர்ந்து விழாவின் 7-ம் நாளான வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கோயிலில் சாமி சன்னதியில் கருவறைக்கு முன்பகுதியில் அதிகாலை 4 மணியளவில் பரணி தீப தரிசனமும், மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீப தரிசனமும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் தெப்பல் உற்சவம் மற்றும் 10-ந் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள கார்த்திகைத் தீபத் திருவிழாவுக்கு சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, விரிவான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும், பாதுகாப்புப் பணிகளை காவல்துறையும் செய்து வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

