திருவண்ணாமலை கிரிவலப்பாதை, 4 மாட வீதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலையில் 14 கி.மீ. கிரிவலப் பாதை மற்றும் 4 மாட வீதிகள் கான்கிரீட் சாலைகள் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளாச்சி குறித்தான ஆய்வுக் கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ . வ . வேலு தலைமையில் நடைபெற்றது . கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் பேசியதாவது ' திருவண்ணாமலை நகரத்திற்கு பல பெருமைகள் உள்ளன. ஒரு காலத்தில் வட ஆற்காடு மாவட்டத்தின் தலை நகராக சித்தூர் , தென் ஆற்காடு தலை நகராக கடலூர் இருந்தபோது தென் ஆற்காடு பகுதியில் திருவண்ணாமலை நகராட்சி இருந்துள்ளது . வடஆற்காடு மாவட்டத்தின் தலைநகராக வேலூர் உருவாக்கப்பட்டு அதில் திருவண்ணாமலை நகராட்சி சேர்க்கப்பட்டது . தலைவர் கலைஞர் அவர்களால் 1989 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முகவரி அளிக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது . திருவண்ணாமலையில் 10 நாள் நடைபெறும் கார்த்திகை தீபம் நிகழ்விற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல் இருந்ததை விட , ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் கூடுகிறார்கள் . நமது மாநிலத்தின் புகழ் பெற்ற ஆண்மீக நகராக திருவண்ணாமலை திகழ்ந்து கொண்டிருக்கிறது .
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச்சென்று திருநகர் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய பணிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும் . திருவண்ணாமலை மாவட்ட தலைநகர் வளர்ச்சிக்கான ஆய்வுக் கூட்டத்தில் பல நல்ல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது குறித்து சம்மந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்கள் அதனை செயல்வடிவம் கொண்டு வருவதற்கு முனைப்புடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவண்ணாமலையில் புதியபேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. நகர் புறத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானோர் கருதுவதால் நகரத்திற்கு வெளியில் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருவதாகவும் தெரிவித்தார்
திருவண்ணாமலை நகர்ப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் சாலை வசதிகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது ஒருமித்த கருத்தாக உள்ளது. திருவண்ணாமலை திருக்கோயில் மேம்படுத்துவற்கு எண்ணற்ற பணிகள் மேற்கொள்ளப்படும் . திருப்பதியை போல் திருவண்ணாமலை திருக்கோயில் மாட வீதிகள் கான்கிரீட் சாலையாக அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முதல் பணியாக திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு , முதலமைச்சர் அவர்களால் விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் . திருவண்ணாமலலை 14 கி.மீ. கிரிவலப் பாதை மற்றும் நான்கு மாட வீதிகளில் கான்கிரீட் சாலை அமைக்கப்படும் , இதற்கான அறிவிப்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் அவர்களால் விரைவில் அறிவிக்கப்படும் . திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதால் விவசாய நிலத்தில் விளையக்கூடிய விளைபொருட்களை பதப்படுத்தி வைக்க குளிர்சாதன கிடங்கு அமைக்கப்படும் என்று தெரிவித்தார். திருவண்ணாமலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்போது வகுப்பறை பற்றாக்குறை இருப்பதால், அந்தப் பள்ளிக்கூடத்தை மேம்படுத்த கூடுதல் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழக அரசின் பொருளாதார நிலை வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில் உள்ளதால் திருவண்ணாமலை மாவட்ட மக்களின் கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலிக்கப்பட்டு நிதி நிலைக்கு தகுந்தார்போல் அனைத்து கோரிக்கைகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு . பிச்சாண்டி , மாவட்ட ஆட்சித் தலைவர் பா . முருகேஷ் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ . பவன் குமார் ரெட்டி, திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி . என் . அண்ணாதுரை , சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி,எஸ் . அம்பேத்குமார்,பெ.சு .தி .சரவணன், ஓ .ஜோதி, திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மு . பிரதாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.