ஸ்மார்ட் வகுப்புகள் முதல் விவசாயம் வரை : தனியார் பள்ளிகளுக்கு டஃப் கொடுக்கும் ராமசாணிகுப்பம் அரசுப்பள்ளி..!
தனியார் பள்ளியை விட அரசுப்பள்ளியில் கல்வி மற்றும் ஒழுக்கக் கட்டமைப்பின் முன்மாதிரியாக அமைந்ததை கண்டு பொதுமக்கள் வியப்படைந்து அவ்வரசு பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு காத்திருக்கிறார்கள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ராமசாணிகுப்பம் கிராமத்தில் உள்ள ஒன்றிய தொடக்க பள்ளியில் எல்.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். ராமசாணிகுப்பம் பள்ளி கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பள்ளியை சுற்றியிலும் முற்புதர்களாகவும் காட்சியளித்து குறைந்த அளவிலேயே மாணவர்கள் பயின்று வந்துள்ளனர்.
அதன் பின்னர் இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற தாமரை செல்வி சேர்ந்த பிறகு, பள்ளியின் அவலநிலையை கண்டு மனமுடைந்து போனார். குறைந்த அளவில் மாணவர்கள் பயின்று வருவதால் பள்ளியில் மாணவர்களை அதிக அளவில் சேர்ப்பதற்காக தனது சொந்த முயற்சியை மேற்கொண்டார். முற்புதற்களுடன் காட்சியளித்த சராசரி அரசு பள்ளியாக இருந்த இப்பள்ளியை அவரது சொந்த செலவிலும், பள்ளிக் கட்டமைப்பை ஊர் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும், பள்ளிக்கல்வி துறையின் மூலமாகவும் மாற்றியமைத்து தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப்பள்ளியை தரம் உயர்த்தினார்.
தற்போது இந்த பள்ளியில் தலைமையாசிரியை உள்பட 2 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 2 ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியை தனது சொந்த செலவிலும் , பள்ளிக்கல்வி துறையின் மூலமாகவும் சம்பளம் கொடுத்து வருகின்றார். இப்பள்ளியில் தற்போது எல்.கே.ஜி முதல் 5-ஆம் வகுப்பு வரையில் சுமார் 362 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.மேலும் தனியார் பள்ளி போல் இந்த பள்ளியில் யோகா , சிலம்பம், கராத்தே கணினி பயிற்சி, கையொழுத்து பயிற்சி, உள்ளிட்ட மாணவர்களுக்கு படிப்பு மட்டுமின்றி கூடுதல் திறனையை வளர்க்க தலைமையாசிரியை மற்றும் ஆசிரியர்களின் சொந்த முயற்சியால் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் பயிற்சி பெறும் இந்த பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பல விருதுகள் பெற்றுள்ளனர்.
மேலும் இன்று அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை என்பதால் ராமசாணிகுப்பம் கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள சுமார் 29 கிராமங்களில் உள்ள குழந்தைகளை சேர்க்க ஆர்வத்துடன் வந்து ராமசாணி குப்பம் கிராமத்தில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளியில் நீண்ட வரிசையில் நின்று தங்களின் பிள்ளைகளை சேர்க்க காத்து கொண்டிருக்கின்றனர். மேலும் தனியார் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களையும், இந்த அரசுப் பள்ளியில் சேர்க்கப்போவதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு தொடக்க பள்ளிகளில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடந்த பள்ளியாக இந்த பள்ளி சிறப்பை பெற்றுள்ளது. தனியார் பள்ளியை நாடிய பெற்றோர்கள் இந்த அரசு பள்ளியில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க ஆர்வத்துடன் வருகின்றனர்.
பிள்ளையின் சேர்க்கைக்கு வந்த ஒரு சில பெற்றோரிடம் பேசினோம். “என்னுடைய மகனை நான் அருகில் உள்ள தனியார் பள்ளியில் படிக்க வைத்தேன் அவன் 2ம் வகுப்பு வரையில் பயின்று வருகிறான். அந்த பள்ளியில் சரியான முறையில் என்னுடைய மகன் படிக்கவில்லை இந்த ராமசாணிகுப்பம் பள்ளியில் பயிலும் மாணவன் எங்கள் வீட்டின் அருகில் தான் உள்ளான். ஆனால் இந்த மாணவன் புத்தகத்தில் ஆங்கிலத்தில் உள்ள வார்தைகள் மற்றும் பழவகைகள் போன்றவற்றை சரளமாக கூறுகிறார்” என்றார். ராமசாணிகுப்பம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவருமே ஒழுக்கமான முறையில் மாணவர்கள் உள்ளனர்.
பள்ளித் தலைமை ஆசிரியர் தாமரை செல்வியிடம் பேசினோம். ”நான் இந்த பள்ளியில் தலைமை ஆசிரியரியராக சேர்ந்தபோது பள்ளியின் கட்டமைப்பு மற்றும் கழிவறை வசதி, தண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் புதர் போன்று காட்சி அளித்தது. அதன் பிறகு பள்ளியை மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலமாகவும் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலமாகவும் மற்றும் ஊர் பொதுமக்கள் மூலமாகவும் பல வகையில் முயற்சிகள் எடுத்தேன். அதன்மூலமாக பள்ளியை தனியார் பள்ளியைவிட சிறப்பான முறையில் மாற்றினேன். தனியாக மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த தனியாக 1000 புத்தகங்களுடன் நூலகம் அமைத்துள்ளோம். பள்ளி வளாகத்தில் மூலிகை தோட்டத்தில், சுமார் 100 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டு மாணவர்களே அதை பராமரிக்கவைத்து, அவர்களுக்கு அதன் மூலம் பாடம் கற்பித்து வருகிறோம்.
பள்ளியை சுற்றி பெரிய சுற்றுச்சுவர் ஒன்று கட்டியுள்ளோம் அதற்கு வர்ணம் பூசுவதைவிட மாணவர்களின் ஓவியத் திறனை மேம்படுத்த அச்சுவரில் ஓவியம் வரையப்பட்டும் வருகின்றது. மாணவர்களுக்கு நவீன முறையில் கழிவறை கட்டியுள்ளோம். "சேவூர் ராமச்சந்திரன் அமைச்சர் திட்டத்தின்கீழ் எங்கள் பள்ளியில் 16 லட்சத்தில் விளையாட்டு மைதானம் அமைத்திருக்கிறோம். மாணவர்கள் உணவுகள் அருந்துவதற்கு தனியாக ஒரு பரந்த வெளியை ஏற்பாடு செய்திருக்கிறோம். எங்கள் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு முறை உள்ளது. மாணவர்களுக்கு எங்கள் பள்ளியில் செய்முறையில் பாடங்களை கற்றுக்கொடுகிறோம். TVS தொண்டு நிறுவனம், டிஜிட்டல் முறையில் கலையரங்கம் அமைத்து கொடுத்தனர். மாணவரின் திறன் கண்டு தனிப்பயிற்சி அளிக்கிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு தொடக்க பள்ளிகளில், அதிகளவில் மாணவர்கள் சேர்த்த பள்ளியாக இந்த பள்ளி சிறப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக குழந்தைகளை சேர்க்க முடியவில்லை என்றும், கூடுதல் வகுப்பறைகள் இல்லை என்பதால் பல பெற்றோர்களை திருப்பி அனுப்பும் நிலைமையும் வருவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த அரசுப்பள்ளி டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது, காமராசர் விருது ஆகிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியதாய் திகழ்கிறது.