Thiruvallur jewells theft: திருவள்ளூர் நகை கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம்.. ஆள் வைத்து கொள்ளையடித்த உரிமையாளர் கைது
திருவள்ளூரில் 175 சவரன் நகையை உரிமையாளரே ஆள் வைத்து கொள்ளையடித்த சம்பவம் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
திருவள்ளூரில் 175 சவரன் நகையை உரிமையாளரே ஆள் வைத்து கொள்ளையடித்த சம்பவம் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
காரணிப்பேட்டையில் நகை வியாபாரியிடம் 175 சவரன் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். நகை வியாபாரி காலுராமிடம் நகைகளை பறித்துச் சென்ற நகைக்கடை உரிமையாளர் கமல் உட்பட 5 பேரை கைது செய்ததோடு, 175 சவரன் நகைகளையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. விசாரணையில் காலுராமிடம் இருந்து நகைகளை வாங்கிய கமல் எனும் நகைக்கடை உரிமையாளரே, ஆள் வைத்து நகைகளை கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது. கடந்த 20ம் தேதி சம்பவம் நடந்த நிலையில், நான்கே நாட்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளை சம்பவம்:
சென்னை நெற்குன்றம் ஆர்.ஜே.நகர் பகுதியில் வசித்து வருபவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த புக் ராம். இவரது மகன் ராமேஸ்லால் அதே பகுதியில் கனிஷ் எனும் நகைக்கடையை நடத்தி வருகிறார். அதன் மூலம் சென்னை மற்றும் புறநகர் சுற்றியுள்ள நகை கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.
அந்த வகையில் வகையில் ராமேஸ்லால் கடையில் பணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோகன்லால் மற்றும் காலூராம் ஆகிய இருவரும், இருசக்கர வாகனத்தில் மூக்குத்தி, கம்பல், வளையல் மற்றும் சரடு போன்ற முப்பதுக்கு மேற்பட்ட வகையான தங்க நகைகளை விற்பனைக்காக கொண்டு சென்றனர்.
அரிவாள் வெட்டு - நகை பறிப்பு:
இருவரும் நெற்குன்றத்தில் இருந்து நேரடியாக மாதவரத்தில் உள்ள ஒரு கடைக்கு நகையை கொடுத்துவிட்டு, பணத்தை வசூலித்த பின்னர், மீதமிருந்த 1.400 கிலோ அதாவது 175 சவரன் நகைகள் உடன் வெங்கல் நோக்கி வந்தனர். அப்போது பூச்சி அத்திப்பட்டு காரணிபேட்டை இடையே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, பின்னால் இரண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த மூவர் காலுராம் சென்ற இருசக்கர வாகனத்தை இடை மறித்தனர்.
பின்னர் காலூராமிடமிருந்து அவர்கள் நகையை பிடுங்க முயற்சித்தனர். ஆனால், காலூராம் கொடுக்க மறுத்ததால் வந்தவர்கள் பட்டாகத்தியை கொண்டு அவரை தாக்கினர். இதில் காலுராமுக்கு கை கட்ட விரலில் வெட்டு காயம் பட்டது. அதைத் தொடர்ந்து சோகன் லாலை வெட்ட முயற்சிக்க மேற்கொண்ட போது, அவர் அங்கிருந்து சிறிது தூரம் தப்பி ஓடினார்.
இதையடுத்து, இரண்டு இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த மூன்று கொள்ளையர்கள் நகையை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ராமேஸ்லால் அளித்த புகாரின் பேரில், காவல்துறை விசாரணை மேற்கொண்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததை தொடர்ந்து, நான்கு நாட்களுக்குப் பிறகு குற்றவாளிகள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், நகைக்கடை நடத்தி வரும் கமல் என்பவர் தான், திட்டமிட்டு ஆள் வைத்து நகைகளை கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது.