Thirumahan Everaa Death: ஈரோடு கிழக்கு காங்கிரஸ் எம்எல்ஏ ஈவெரா திருமகன் மரணம்: முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெ.ரா. திருமகன் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா(Thirumagan Evera) இன்று மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. ஈரோடு கிழக்கு எம்எல்ஏவாக திருமகன் ஈவெரா பதவி வகித்து வந்தார். அவரின் மறைவுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் இரங்கல்
’’ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈ.வெரா. திருமகன் மறைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.
பாட்டனார் சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத், தந்தையார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எனப் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தைச் சேர்ந்த ஈ.வெ.ரா. திருமகன் 2021ஆம் ஆண்டுதான் முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமைதியோடும் பொறுப்புணர்வோடும் அவை மூத்தவர்கள் மீதுமரியாதையோடும் அவர் நடந்துகொள்ளும் விதத்தால் அனைவரது அன்புக்கும் உரியவராகத் திகழ்ந்து வந்தவர் ஈ.வெ.ரா. திருமகன்.
ஒரு மாதத்துக்கு முன்பு கூட, குதிரையேற்றப் போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தனது மகளை மகிழ்ச்சியுடன் அழைத்துக்கொண்டு வந்து என்னிடம் வாழ்த்து பெற்றுச் சென்ற தம்பி திருமகனின் உற்சாகம் ததும்பும் முகம் மனதில் நீங்காமல் நிற்கிறது. தனது அன்புமகனை இழந்துள்ள ஆருயிர் அண்ணன் இளங்கோவனை எப்படித் தேற்றுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்.
ஈ.வெ.ரா. திருமகன் மறைவால் துயரில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர், ஈரோடு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கனத்த இதயத்துடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினரும்,முன்னாள் மத்திய அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் E.V.K.S இளங்கோவன் மகனுமாகிய ஈவெரா உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன். மகனை இழந்து வாடும் இளங்கோவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், திருமகன் ஈவெரா ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: காங்கிரஸ் இரங்கல்
காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘’திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். 46 வயது மட்டுமே நிரம்பிய அவரது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது தந்தையார் ஈ.வெ.கி.ச. இளங்கோவனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கனத்த இதயத்துடன் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டுள்ளது.
அன்புமணி ராமதாஸ் இரங்கல்
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவேகிச இளங்கோவனின் புதல்வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமான செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
டிடிவி தினகரன் இரங்கல்
தந்தை பெரியாரின் கொள்ளுப்பேரனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அரசியலில் வளர்ந்து வந்துகொண்டிருந்த இளம் வயதிலேயே திருமகனை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.