TN Weather Update: சுட்டெரிக்கும் சூரியன்... 13 மாவட்டங்களில் சதம் அடித்த வெயில்..! மக்கள் அவதி...!
சென்னையில் இந்த ஆண்டில் முதல் முறையாக 2 இடங்களில் 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் இன்று பதிவாகியுள்ளது
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 17 இடங்களில் வெயில் சதம் அடித்த நிலையில், இந்த மாதம் முதல் முறையாக இன்று 13 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் ஒரு இடங்களில் மட்டுமே சென்னையில் வெயில் சதம் அடித்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கத்தில் வெயில் சதம் அடித்துள்ளது.
சென்னையில் 2 இடங்கள்
சென்னை நுங்கம்பாக்கம் 105.26° பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கம் 105.08°பாரன்ஹீட், கடலூர் 101.12°பாரன்ஹீட், ஈரோடு 102.92° பாரன்ஹீட், கரூர் பரமத்தி 104.00° பாரன்ஹீட், மதுரை விமான நிலையம் 103.64° பாரன்ஹீட், நாகப்பட்டினம் 100.76° பாரன்ஹீட், பரங்கிப்பேட்டை 100.58° பாரன்ஹீட், பாண்டிச்சேரி 101.84° பாரன்ஹீட், தஞ்சாவூர் 102.20° பாரன்ஹீட், திருச்சி 102.74° பாரன்ஹீட், திருத்தணி 103.64° பாரன்ஹீட், வேலூர் 106.70° பாரன்ஹீட் வெயில் இன்று பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரின் ஹீட்டை தாண்டாத நிலையில் இன்று 13 இடங்களில் முதல் முறையாக இந்த மாதத்தில் வெயில் சதம் அடித்துள்ளது. நீண்ட நாட்கள் கழித்து சென்னையில் 2 இடங்களில் இன்று வெயில் சதம் அடித்துள்ளது. அதேபோல் புதுச்சேரியிலும் நீண்ட நாட்கள் கழித்து இன்று வெயில் சதம் அடித்துள்ளது.
கரையை கடந்த புயல்:
நேற்று (13.05.2023) மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோக்கா” புயலானது, வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (14.05.2023) காலை 0830 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 850 கிலோ மீட்டர் வடக்கு – வடமேற்கே நிலைகொண்டிருந்தது.
இது வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதி தீவிர புயலாக கடந்தது. புயல் கரையை கடந்த சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 180 முதல் 190 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 210 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
14.05.2023 முதல் 16.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.05.2023 மற்றும் 18.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை :
14.05.2023 முதல் 18.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 - 3 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும்.
14.05.2023, 15.05.2023 மற்றும் 16.05.2023 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.