Thevar Jayanthi: முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா.. மதுரையில் உள்ள சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை..!
முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அவர் பிறந்த ஊரான பசும்பொன்னில் இன்று நடைபெறுகிறது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை இன்று நடைபெறும் நிலையில், மதுரை மாநகரமே களைகட்டியுள்ளது.
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என தெரிவித்து இறுதிவரை நாட்டிற்காகவே வாழ்ந்த முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழா மற்றும் 61வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டத்தில் அவர் பிறந்த ஊரான பசும்பொன்னில் இன்று நடைபெறுகிறது. இதற்கான விழா அவரது நினைவிடத்தில் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி தொடங்கியது. முக்குலத்தோர் சமுதாய மக்கள் காப்பு கட்டி, விரதம் இருந்து பசும்பொன்னுக்கு வந்து பால்குடம், முளைப்பாரி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தி முத்துராமலிங்க தேவரை வழிபட்டு வருகின்றனர்.
இதனிடையே இன்று நடக்கும் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையில் கலந்து கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், பாஜக தலைவர் அண்ணாமலை, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிடோர் பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரையில் முதலமைச்சர் ஸ்டாலின்
இதனிடையே முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிலைக்கு கீழே வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ரூ.340 கோடி செலவில் கோரிப்பாளையம் - அப்பல்லோ சந்திப்பு வரையிலான 2 மேம்பால பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து தெப்பக்குளம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதேபோல் எடப்பாடி பழனிசாமியும் மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் கோரிப்பாளையம் வரவுள்ள நிலையில் அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.