‛சொத்துகுவிப்பு வழக்கில் முகாந்திரம் உள்ளது’ - ராஜேந்திர பாலாஜி மேல்முறையீட்டை தள்ளுபடி செய்ய தமிழக அரசு வாதம்!
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது.
தமிழக முன்னாள் பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இருவேறு மாறுபட்ட தீர்ப்பை கடந்த மார்ச் மாதம் வழங்கினர். இதைத்தொடர்ந்து வழக்கு மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் நிலுவையில் இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றாமல் விசாரணை நடத்தி வருவதாகவும், இது காலம் கடந்த குற்றச்சாட்டு என்பதால் அதில் முகாந்திரம் இல்லை எனவும் அதனால் உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேப்போன்று இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த், நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்ட வழக்கை 4 ஆண்டுகள் கழித்து சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்தது முற்றிலும் தவறு என்று கூறி வாதாடினார். மேலும், உரிய விதிமுறைகள் பின்பற்றப்படாமல் வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்கு மாற்றப்பட்டதும், அதற்கான காரணம் கூட தெரிவிக்கப்படவில்லை என்பதாலும் இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற விசாரணைக்கு தடை வித்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
எதன் அடிப்படையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது என கேள்வியெழுப்பிய நீதிபதிகள், ராஜேந்திர பாலாஜி தொடர்பான வழக்கை விசாரிக்கலாம். ஆனால், உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, இதுகுறித்து கேவியட் மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். ராஜேந்திர பாலாஜி சொத்து குவித்ததற்கு முகாந்திரம் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது. ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளது. வருமானத்தை விட அதிக சொத்து சேர்த்ததற்கு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் விசாரணை நடத்தியது என கூறியுள்ளது. தற்போது இந்த சொத்துகுவிப்பு வழக்கில் முகாந்திரம் உள்ளது என்று தமிழக அரசு தரப்பு நீதிமன்றத்தில் பதில் அளித்திருப்பது இந்த வழக்கில் பெரும் திருப்பமாக அமைந்துள்ளது.