தாலி கட்ட வேண்டிய நேரத்தில் தள்ளாடிய மாப்பிள்ளை... போதை மணமகனுக்கு குட்பை சொல்லி மாலையை வீசிய மணப்பெண்!
மாப்பிள்ளை மதுபோதையில் இருந்ததால் பெண் தான் அணிந்திருந்த மாலையை கழற்றி வீசி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் தொட்டப்படகாண்ட அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் 32 வயதான சரவணன். இவர் அதே பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான லட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
இரு வீட்டாரின் குடும்பத்தின் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்ட திருமணம், கிருஷ்ணகிரி மாவட்டம் வஜ்ஜிரபள்ளம் கிராமத்தில் நேற்று காலை 6 மணிக்கு உள்ள ஈஸ்வரன் கோவிலில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், நேற்று காலை பெண் வீட்டார் மற்றும் மணப்பெண் தன்னை அலங்கரித்துக்கொண்டு திட்டமிடப்பட்டு நேற்று முன்தினம் இரவு ஈஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது, வெகுநேரமாக மணமகன் வீட்டில் இருந்து யாரும் வராததால் சந்தேகமடைந்த பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, மணமகன் தன்னை சுற்றி என்ன நடப்பது என்பது கூட தெரியாத நிலையில் மது போதையில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மணப்பெண், தனக்கு இந்த மாப்பிள்ளையும் வேண்டாம். திருமணமும் வேண்டாம் என்று ஆவேசமாக கூறிவிட்டு தனது கழுத்தில் இருந்த மாலையை கழற்றி வீசி கல்யாணத்தை நிறுத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத இரு வீட்டாரும் மணப்பெண்ணிடம் சமரசம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மணமகள், திருமணத்துக்கு முன்னரே இப்படி குடித்தவர், திருமணத்துக்கு பிறகு என்னுடைய வாழ்க்கையை நாசமாக்கி விடுவார் என்று கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாய்மாமன் மாரண்டள்ள அள்ளி போலீசில் புகார் செய்தனர்.
அவர்கள் அளித்த அந்த புகாரில், திருமணத்துக்கு ஆன செலவுதொகையை மணமகன் வீட்டாரிடம் வாங்கி தர வேண்டும் என்றனர். புகாரின் அடிப்படையில், போலீசார் மாப்பிள்ளை சரவணன், அவருடைய குடும்பத்தினரைநேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது, போதைதெளிந்த சரவணன், இனிமேல் குடிக்க மாட்டேன், பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று காவல்துறை அதிகாரியிடம் கூறினார். காவல்துறை தரப்பில் இதற்கு மணப்பெண் சம்மதம் தெரிவிக்க வேண்டும். நீங்கள் அவரிடம் பேசி பாருங்கள் என்று தெரிவித்துள்ளனர். காவல் நிலையத்தில் சரவணன், மணப்பெண்ணிடம் எவ்வளவோ பேசி பார்த்தும் அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து, குடிக்கும் மாப்பிள்ளை வேண்டாம் என்று இறுதியாக தெரிவித்து, தனது வீட்டாரை அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்