Pen Statue: கடலில் பேனா சின்னம்.. மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்த பொதுப்பணித்துறை..
சென்னை மெரினா கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பான சுற்றுச்சூழல் அறிக்கையை மத்திய அரசிடம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
பேனா நினைவுச் சின்னத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் சமர்ப்பித்தது தமிழ்நாடு பொதுப்பணித்துறை.
விரைவில் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இத்திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கவுள்ளது என கூறப்படுகிறது. கருணாநிதி பேனா நினைவுச் சின்னம் அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்திற்கு அருகே, மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பேனாவை, ரூபாய் 81 கோடி செலவில், 42 மீட்டர் உயரத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பதிலளித்துள்ள பொதுப்பணித்துறை அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பிறகே கடலில் பேனா சின்னம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது. மேலும் அனுமதி பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து பேனா நினைவுச் சின்னத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது தமிழ்நாடு பொதுப்பணித்துறை. விரைவில் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இத்திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்கவுள்ளது என கூறப்படுகிறது.
இன்று தாக்கல் செய்த அறிக்கையில், “ மொத்தமாக 2.11 ஏக்கர் பரப்பளவில் (கடற்கரை மற்றும் கடல் பகுதி இரண்டும் சேர்த்து) இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது, கட்டுமான பணிகளுக்கு சுமார் 10 KLD (kilo litre/day) நீர் தேவைப்படும் என்றும் நிலத்தடி நீரை பயன்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னத்தின் கட்டுமான பணிகளின் போது தினசரி 98 கிலோ வரை கழிவுகள் இருக்கும். அதனை அருகில் இருக்கக்கூடிய முனிசிபல்/ மாநகராட்சி குப்பை கூடங்கள் மூலம் அகற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னம் அமைப்பதன் மூலம் சுற்றுசூழலில் சிறிய அளவு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அது சரி செய்யப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. சுமார் 81 கோடி மதிப்பில் இந்த நினைவு சின்னம் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.