Omni Bus Strike: சொந்த ஊரில் இருந்து திரும்பும் மக்களுக்கு அதிர்ச்சி.. இன்று 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது..
சிறை பிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகள் விடுவிக்கப்பட வேண்டும் என கூறி இன்று 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நேற்று ஆயுத பூஜை/ சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட்டது இன்று விஜய தசமி கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாள் மற்றும் வார இறுதி நாட்கள் என 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. சிறப்பு பேருந்துகளில் டிக்கெட் இல்லாத காரணத்தால் ஆம்னி பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டது. எப்போதுமே ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அரசு சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் பலரும் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரிய வந்தது. அப்படி வசூல் செய்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் விதிமீறலில் ஈடுபட்ட 120 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க வார விடுமுறை, ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி என தொடர் விடுமுறையை ஒட்டி சுமார் 3 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். அந்த வகையில் இன்றுடன் விடுமுறை நாள் முடிவுக்கு வருகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் இன்று சென்னை திரும்ப உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதாக கூறி 120 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துகள அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்த்களுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறி இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இன்று விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னைக்கு பயணம் மேற்கொள்ள சுமார் 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்கு இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.