தஞ்சையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் போலீஸ் கஸ்டடியில் மரணம்...!
கடந்த 11 நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சத்தியவாணன் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளதாக கூறப்படுகிறது
தஞ்சை சீதா நகரில் ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் சுவாமிநாதன் என்பவரின் வீட்டில் வைத்து கடந்த 10 ஆம் தேதி 5 லட்சம் பணம் மற்றும் 6 சவரன் நகைகள் திருட்டு போனது. இக்கொள்ளை தொடர்பாக சுவாமிநாதன் கும்பகோணம் மேற்கு காவல் துறையில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மேற்கு போலீசார் கடந்த 12ம் தேதி வழக்கு பதிவு செய்து அன்றைய தினமே தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் கடந்த 12 தேதி இரவு தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனைக்குள் சந்தேகத்திற்கிடமாக படுத்து இருந்த சீர்காழியை சேர்ந்த சத்தியவானன் (32), சென்னையை சேர்ந்த அப்துல் மஜீத் (41), தஞ்சை பூக்கார தெருவை சேர்ந்த சூர்யா ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மூன்று பேரும் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடையது போலீசாருக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலைய பின்புறம் உள்ள ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை தொடங்கினார். அப்போது தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கொள்ளை வழக்குகளில் தொடர்பு உள்ள கைரேகையும், இவர்கள் 3 பேரும் கைரேகைகளும் ஒத்துப் போனது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த 11 நாட்களாக விசாரணை நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் சத்தியவாணன் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மீதமுள்ள அப்துல் மஜீத் மற்றும் சூர்யாவை போலீசார் பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர்.
போலீசார் கூறுகையில், போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து கொண்டிருந்தபோது சத்தியவாணனுக்கு இன்று அதிகாலை 3:30 அளவில் நெஞ்சு எரிச்சலாக இருக்கிறது என்று தெரிவித்தார். உடனே போலீசார் அவரை தஞ்சை மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சத்தியவாணன் இறந்தார். போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் போலீஸ் கஸ்டடியிலேயே இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தஞ்சை மருத்துவமனை மருத்துவக் கல்லூரி டிஐஜி பர்வேஷ் குமார், எஸ்.பி.ரவளிபிரியா காந்த் புனேனி தலைமையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டிஐஜி பர்வேஸ்குமார் தனது காரில் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் இருந்து தனது காரில் புறப்படுவதற்காக காரில் ஏறி அமர்ந்தார். நிருபர்கள் அவரிடம் பேட்டி எடுப்பதற்காக குவிந்தனர். இதனை அறிந்த டிஐஜி பரமேஷ் குமார் மீண்டும் காரில் இருந்து இறங்கி காவல் நிலையத்திற்குள் சென்று விட்டார்.