Minister Ponmudi Case: அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் செக்...! சொத்துகுவிப்பு வழக்கில் மறு விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து இன்று விசாரணைக்கு எடுக்கிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுவித்து வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அந்த வழக்கை தானாக முன் வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
வழக்கு பின்னணி என்ன?
2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் இருந்தபோது, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கன்னியப்பன் இந்த வழக்கைத் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.1.36 கோடிக்கு மேல் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களைக் குவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
முதலில், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலும், பின்னர் 2015ஆம் ஆண்டு முதல் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலும் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. பல கட்டங்களாக விசாரணை நடைபெற்ற நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையால் தொடரப்பட்ட, சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி தனது மனைவியுடன் நீதிமன்றத்தில் தீர்ப்பு நாளன்று ஆஜரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியையும் அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்வதாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், வழக்கில் முகாந்திரம் இல்லை எனவும் கூறி , அமைச்சர் பொன்முடியும் அவரது மனைவியும் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார். நீதிபதியின் உத்தரவால் மகிழ்ச்சியில் இருந்த பொன்முடிக்கு இந்த வழக்கால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.
தாமாக முன் வந்து வழக்கு தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றம்:
கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்படாமால் இருந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து வழக்கை இன்று விசாரணைக்கு எடுக்க உள்ளார். சமீபத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்தது மூலமாக 28 கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில் அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பின் அவரை அழைத்துச் சென்று அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இரண்டு நாள் விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்பட்டார். அவர் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டு, ஒரு மாத காலம் கூட ஆகாத நிலையில் அவருக்கு மேலும் ஒரு புதிய சிக்கலாக இன்றைய வழக்கு விசாரணை இருக்கும் என கூறப்படுகிறது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தற்போது சுழற்சி முறையில் எம்.பி. எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் நிலையில், அமைச்சர் பொன்முடி வழக்கை தாமாக விசாரணைக்கு எடுத்து பட்டியலிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையோ அல்லது பொன்முடிக்கு எதிரான நபர்கள் யாருமோ மேல்முறையீடு செய்யாத நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் என்ன காரணத்திற்காக இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளார் என்பதை விசாரணையின்போது அவர் தெரிவிக்கவுள்ளார்.