Ma Subramaniyan: அரசு மருத்துவமனை லிஃப்டில் சிக்கிய அமைச்சர் மா.சுப்ரமணியன்... 2 பொறியாளர்கள் சஸ்பெண்ட்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில், மின்தூக்கிகளை சரியாக பராமரிக்காத காரணத்தால் பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கை அறுவை சிகிச்சைச் சிறப்பு மேற்படிப்பு துவக்கம் மற்றும் புனரமைக்கப்பட்ட நூற்றாண்டு நிர்வாக கட்டட அலுவலகம் திறப்பு விழாவிற்கு, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கடந்த நவம்பர் 29ஆம் தேதி சென்றார்.
மின்தூக்கியில் சிக்கிய அமைச்சர்:
மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருடன், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் பி.செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜி, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஐட்ரீம் மூர்த்தி மற்றும் சிலர் உடன் சென்றனர்.
அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள், மருத்துமனையில் உள்ள மின்தூக்கியில் செல்லும்போது, மின் தூக்கி பாதி வழியில் நின்றது. செய்வதறியாது திகைத்து நின்ற அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பின்னர் லிப்ட் ஆப்ரேட்டர் உதவியுடன் லிப்டின் ஆபத்துக் கால கதவின் வழியே வெளியேறினர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
View this post on Instagram
மின்தூக்கியை பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்று விட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் அமைச்சர் விசாரித்த போது, இது போன்று அடிக்கடி மின்தூக்கி பழுதடைந்து விடுகிறது எனத் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் இதேபோன்று லிப்ட் பிரச்சனை இருந்தது, அங்கு இருக்கும் 24 லிப்டுகளையும் உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 17 லிப்டுகள் தற்பொழுது மாற்றம் பட்டு இருக்கிறது. அதே பிரச்சனை தற்பொழுது ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் ஏற்பட்டு இருக்கிறது உறுதியாக பழுதடைந்த லிப்டுகளை மாற்றி விட்டு புதிய லிப்ட்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
லிப்ட் சரி செய்கிறார்களா என்பதை தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என்றும் பழுதடைந்த லிப்ட்கள் மாற்றி அமைக்கபடும், புதிய லிப்டுகள் அமைக்கபடும் அனைத்து லிப்டுகளும் சரிசெய்யபடும் எனவும் தெரிவித்தார்.
பொறியாளர்கள் பணி நீக்கம்:
இதனைத் தொடர்ந்து, இதற்கு பொறுப்பான பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் டி.சசிந்தரன், மற்றும் உதவிப் பொறியாளர் வி.கலைவாணி ஆகிய இருவரையும் உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டுள்ளது.