TN Govt Statement : புயல், கன மழை எச்சரிக்கை ...முதலமைச்சர் தலைமையில் நடைபெற இருந்த மாற்றுத்திறனாளிகள் தின விழா ஒத்திவைப்பு....
டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா புயல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தின விழா ஒத்தி வைக்கப்படுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது புயல் / கனமழை எச்சரிக்கை காரணத்தினால் ஒத்திவைக்கப்படுகிறது
உலக மாற்றுத்திறனாளிகள் தினம், ஆண்டுதோறும் டிசம்பர் மூன்றாம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிசம்பர் இரண்டாம் தேதி காலை 10.30 மணியளவில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா / விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கும் விழா / மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.
மாற்றுத்திறனாளிகள் தின விழா ஒத்தி வைப்பு
தற்போது, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை சென்னையில் புயல் / கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக, டிசம்பர் 2-ஆம் தேதி முதலமைச்சர் தலைமையில் நடைபெற இருந்த உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது. இவ்விழா நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்”. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல்/ மழை தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”நேற்று (30-11-2023) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (01-12-2023) காலை 0530 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று (01-12-2023) காலை 0830 மணி அளவில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 760 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 780 கிலோமீட்டர் தொலைவிலும், பாபட்லாவிற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 960 கிலோமீட்டர் தொலைவிலும், மசூலிபட்டினத்திற்கு (ஆந்திரா) தென்கிழக்கே சுமார் 940 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 02-12-2023 வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 03-12-2023 வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும். அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 மாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் சென்னைக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கரையை கடக்கக்கூடும்.
01.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
03.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.12.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்”. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.