(Source: ECI/ABP News/ABP Majha)
Thai Poosam 2023: தைப்பூசம் 4-ஆம் தேதியா? 5-ஆம் தேதியா..? விரதம் இருக்கும் முறை என்ன? பக்தர்களே இதைப்படிங்க
Thaipusam 2023: இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம். அன்று விரதம் இருக்கும் முறை மற்றும் வழிபாடு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகை மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம்(Thaipusam). தமிழகம் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலோசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிக்கும் உலக தமிழர்களும், முருகபெருமானுக்கு உகந்த முக்கிய நாளான தைப்பூச திருவிழாவை கொண்டாடுவது வழக்கம். இந்த திருநாளில் பக்தர்கள் முருகபெருமானுக்காக அலகு குத்தி காவடி தூக்கி வீட்டில் முருகனுக்கு நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
தைப்பூசம்:
தை மாதம் 22ம் தேதி பிப்ரவரி 05ஆம் தேதி தைப்பூசம் என கணக்கிடப்பட்டுள்ளது. தை மாதம் 21ஆம் தேதி காலையில் 09 மணிமுதல் பூசம் நட்சத்திரம் ஆரம்பமாகிறது. அடுத்தநாள் தை 22ஆம் தேதி மதியம் 12:13 மணி வரை பூசம் நட்சத்திரம் இருக்கிறது. பிப்ரவரி 5ஆம் தேதி காலை முதலே இந்த நட்சத்திரம் இருப்பதால் அன்று தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.
கொடியேற்றம்:
பழனியில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படும். தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பழனி ஊர்க்கோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி அம்மன் கோவிலில் 29ஆம் தேதி காலை 9.30 மணியளவில் கோவில் முன்பு உள்ள கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றப்பட்ட நாள் முதல் முத்துக்குமாரசாமி வள்ளி, தெய்வானை சமேதராக தங்கமயில், வெள்ளிமயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
அதே போல் பாதயாத்திரை வரும் பக்தர்கள், பிப்ரவரி 4 அன்று பழனி சென்றடைந்து அதன் பின் பிப்ரவரி 6, மகம் நட்சத்திரத்தன்று மலைக்கோயிலில் காவடி செலுத்தியபின் நடந்தே வீடு திரும்புவார்கள். தைப்பூசத்தன்று முருகவேலை வழிபட்டால் வாழ்வில் பில்லி, சூனியம், ஏவல் நீங்கும் என்றும் வாழ்வில் செல்வம் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.
தைப்பூச விரதம்(Thaipusam Fasting):
4-ம் தேதி மாலை தைப்பூச திருவிழா தொடங்குகிறது. ஆனால் அன்றைய தினம் பௌர்ணமி இல்லை. அடுத்தநாள் 5-ந் தேதிதான் பௌர்ணமி உள்ளது. அன்றைய தினம்தான் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. சிலர் திதியை வைத்து 4ஆம் தேதி என கூறுகின்றனர், ஒரு சிலர் நட்சத்திரம் வைத்து பிப்.5ஆம் தேதி என்கின்றனர்.
பிப்ரவரி 4ஆம் தேதி மாலை தொடங்கி 5ஆம் தேதி வரை விரதம் மேற்கொள்ளலாம். அதே சமயம் 5-ந் தேதி காலை தொடங்கி 5ந் தேதி மாலை வரைக்கும் விரதத்தை மேற்கொண்டால், போதுமானது. இரவு முருகனுக்கு என்ன பலகாரம் அல்லது நெய்வேத்தியம் செய்யப்படுகிறதோ அதே நெய்வேத்தியத்தை நாமும் உட்கொள்ளலாம் என கூறப்படுகிறது. விரதம் கடைபிடிக்கும்போது நடுவில் பசித்தால் முருகப்பெருமானுக்கு படைக்கின்ற பால் பழங்களை சாப்பிட்டுக்கொள்ளலாம்.
சிறப்பு ரயில்கள்:
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரை, பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல், கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, மதுரை, பழனி இடையே இயக்கப்படும் ரயில் வண்டி எண் 06080 மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது. சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து ரயில் வண்டி எண் 06079 மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறது.
இதேபோல் கோவை, திண்டுக்கல் ரயில் எண் 06077 காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06078 மதியம் 2.55 மணிக்கு பழனி வருகிறது. பின்னர் 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.