சேலம்: புத்தாண்டு கொண்டாட்டம்; மேம்பாலங்களில் பயணம் செய்ய தற்காலிக தடை..! எவ்வளவு நேரம்..?
சேலம் மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்துவதற்காக 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சேலம் மாநகரில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களை கண்காணிக்க புதிய செயலியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகரில் 19 காவல்நிலையங்களில் உள்ள காவலர்கள், நெடுஞ்சாலைத்துறை ரோந்து காவலர்கள் ஆகியோருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதனை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல்ஹாேதா துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகர காவல் நிலையங்களில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காவல் நிலைய வரவேற்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்களிடம் தகவல்களை பெற்று அவர்களுக்கான நடவடிக்கை குறித்து பதிவு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சேலம் மாநகர துணை ஆணையாளர் லாவண்யா மற்றும் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில, "நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு இன்று இரவு கொண்டாடப்பட உள்ள நிலையில் காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சேலம் மாநகர் முழுவதும் கண்காணிப்பு பணியை தீவிரப் படுத்துவதற்காக 1500 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த புத்தாண்டு விபத்து இல்லாத புத்தாண்டாக கொண்டாடுவதற்கான முழு முயற்சியை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு இருசக்கர வாகனங்களை பெற்றோர் வழங்கக் கூடாது என்று அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.மீறி வாகனங்களை கொடுக்கும் பட்சத்தில் அவர்களது பெற்றோர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரில் உள்ள முக்கிய மேம்பாலங்களில் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மேம்பாலத்தில் பயணம் செய்ய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேளிக்கை விடுதிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சேலம் மாநகரில் பட்டாசு கடைகளில் முறையாக விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்கிறார்களா? என்பதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று சேலம் போக்குவரத்து கழகம் சார்பில் நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு தொடங்க இருக்கிறது. புத்தாண்டு விடுமுறையை கொண்டாட வெளியூர்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். ஏற்கனவே, புத்தாண்டை யொட்டி ரயில் மற்றும் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு முடிந்து விட்டது.

பயணிகளின் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள் வரும் 2 ஆம் தேதி வரை இயக்க போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது குறித்து சேலம் கோட்ட போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் கோட்டம் சார்பில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பேருந்துகள் சென்னை, பெங்களூர், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி, ஓசூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல் உட்பட பல ஊர்களுக்கு சிறப்பு போக்குவரத்து இயக்கப்படுகிறது. சேலம் மண்டலம் சார்பில் சேலம், நாமக்கல்லில் இருந்து 300 சிறப்பு பஸ்களும், தர்மபுரி மண்டலம் சார்பில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் சேர்த்து மொத்தம் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.' என்றனர்.





















