'கோயில் நிலம் கோயில்களுக்கே.. வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது’ - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
கோயில் நிலம் கோயில்களுக்கே, வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று கோயில்களுக்கு சொந்தமான நிலவழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.
தமிழ்நாட்டு கோயில்களுக்கு சொந்தமாக இருந்ததாக 1985 – 87-ஆம் ஆண்டில் கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டிருந்த 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் நிலம் தொடர்பாக வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழக அரசு, 1985-86 மற்றும் 1986-87-ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக 5 லட்சத்து 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது. மேலும், 2018–19 மற்றும் 2019–20ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பேட்டில், 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது.
கோயில் சொத்து விபரங்கள் பதிவேற்றம்; சிதம்பரம் கோயில் சொத்துக்கள் இடம் பெறுமா?
இதில் மீதமுள்ள 47 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கண்டுபிடிக்க உத்தரவிட வேண்டும். அதேபோல, கோவையில் உள்ள தண்டபாணி ஆண்டவர் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றவேண்டும். கோயில் நிலங்களின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் 50 சதவீதத்தை கோயில்களுக்காக பயன்படுத்த உத்தரவிடவேண்டும்’ என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 1985- 87-ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள நிலங்களின் விவரங்களையும் மற்றும் 2018- 2020-ஆம் ஆண்டுகளில் வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்ட நிலங்களின் விவரங்களையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், கோவை கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எந்த தடையும் இல்லை என கடிதம் அனுப்பிய சூலூர் சார் பதிவாளர், அதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்த்துடன், இந்த மனுவுக்கு விரிவாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
முன்னதாக, கோயில்களின் நிலம் குறித்த விவரம் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களின் நில ஆவணங்கள் www.hrce.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டன. முதற்கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நிலம் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளன.