சென்னையில் டாஸ்மாக் கடைகள் திடீர் மூடல்; அதிர்ச்சியில் மது பிரியர்கள் - காரணம் என்ன?
சென்னையில் டாஸ்மாக் கடைகளை திறக்க மாட்டோம் என ஊழியர்கள் தெரிவித்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சென்னையில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில் டாஸ்மாக் ஊழியர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலி மது பாட்டில் திரும்பப்பெறும் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து 500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் டாஸ்மாக் கடை திறக்கவில்லை
காலி பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் அவசரப்படுத்துவதாக ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். மது பாட்டிலில் விலையை மாற்றம் செய்த பிறகு காலி பாட்டிலை திரும்பப் பெற ஒட்டப்படும் ஸ்டிக்கரை கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தால் வேலைப் பளு அதிகரித்திருப்பதாகக் குற்றம்சாட்டும் ஊழியர்கள் காலி பாட்டில்களை வாங்கி வைக்க போதிய இடமும் இல்லை என்றும் கூறி டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காலி பாட்டிலை திரும்ப பெற கட்டாயப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாஸ்மாக் ஊழியர்களுடன் சென்னை மண்டல மூத்த அலுவலர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம் என ஊழியர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, டாஸ்மாக் கடை திறக்கப்படாததால் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை முன் ஏமாற்றத்துடன் காத்திருக்கும் மது பிரியர்கள்.
டாஸ்மாக் பிறப்பித்த உத்தரவு என்ன?
வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10/-கூடுதலாகப் பெற்று மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10/-ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தின் நோக்கம். காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும்.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் சென்னை புறநகரில் தற்போது செயல்பட்டு வருகிறது. அங்குள்ள டாஸ்மாக் கடைகளின் இடம் பெரியதாக இருப்பதால், புறநகர் பகுதியில் இதுபோன்ற பிரச்னைகள் ஏதும் இதுவரை ஏற்பட்டதில்லை. சென்னையில் உள்ள கடைகள் சிறிய இடங்களில் இருப்பதால் இத்திட்டத்தை செயல்படுத்துவது சிரமம் என்று கூறி ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.





















