TASMAC: மதுப்பிரியர்களுக்கு ஷாக்... நடப்பாண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் - அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி..!
TASMAC: தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 500 மதுபானக் கடைகள் மூடப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றம் மார்ச் 20-ந் தேதி பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரில் அந்தந்த துறைகளின் மீதான மானியக்கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று சட்டமன்றத்தில் மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பதிலளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது, “ தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். தமிழ்நாட்டில் உள்ள 5 ஆயிரத்து 329 கடைகளில் தகுதியான 500 கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும். டாஸ்மாக் கடைகளின் பணியாளிர்களின் தொகுப்பூதியம் உயர்த்தப்படும்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்களுக்கு ரூபாய் 1,100 ரூபாயும், விற்பனையாளர்களுக்கு ரூபாய் 930 உயர்த்தி வழங்கப்படும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம் வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும். தொகுப்பூதிய உயர்வால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூபாய் 31 கோடியே 57 லட்சம் கூடுதல் செலவாகும். டாஸ்மாக் உதவி விற்பனையாளர்களுக்கு ரூபாய் 840 உயர்த்தி வழங்கப்படும்.
அதிக உயர்மின் அழுத்தம் கொண்ட மின்பாதைகளில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும். மதுரை, கரூர், கோவை மாநகராட்சி பகுதிகளில் மேல்நிலை மின்கம்பிகள் புதைவட கம்பிகளாக மாற்றப்படும். நடப்பாண்டில் 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் புதியதாக வழங்கப்படும்.
அரசு – தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும். மின்சார உற்பத்திக்காக வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் 2022-2023ம் நிதியாண்டில் ரூபாய் 44 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் சுமார் 8 ஆயிரம் கோடி அதிகம் ஆகும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தினசரி விற்பனையாகும் மதுபான விற்பனையை காட்டிலும் தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு விற்பனையாகும் மதுபான விற்பனை பல மடங்கு அதிகம் ஆகும். மேலும், விடுமுறை தினங்களில் வார இறுதி நாட்களில் மதுபான விற்பனை மிகவும் அதிகளவில் விற்பனையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அளித்த தேர்தல் வாக்குறுதியில் தமிழ்நாட்டில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Fast Track Cabs: கார்ப்பரேட்டுகளைத் தாண்டி நிற்கும் தமிழக நிறுவனம்; ஃபாஸ்ட் ட்ராக் டாக்ஸியின் 23ஆம் ஆண்டு விழா கொண்டாட்டம்
மேலும் படிக்க: TN 10th Exam 2023: 10ஆம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு கேள்விகளில் பிழைகள்; கூடுதல் மதிப்பெண்கள் வழங்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை