தமிழ்நாடு வேலை தமிழருக்கே: #TamilNaduJobsForTamils என்னும் ஹேஷ்டேக் வைரல்!
தமிழ்நாடு வேலை தமிழருக்கே என்னும் சட்டத்தை இயற்றக்கோரி தமிழ்தேசிய பேரியக்கம் நடத்தும் போராட்டத்தை ஒட்டி, ட்விட்டரில் #TamilNaduJobsForTamil என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் உள்ளது.
மத்திய அரசின் துறைகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள பணி காலியிடங்களுக்கு வெளிமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாடு தமிழர் தாயகம் என்ற தகுதியை இழந்துபோகும் அளவுக்கு, மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்குள் வெளி மாநிலத்தவர் குடியேறிக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். தமிழர்களின் அரசு மற்றும் தனியார் வேலைகள் மட்டுமின்றி, தொழில், வணிகம் என அனைத்திலும் வெளி மாநிலத்தவர் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இதற்கெதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கம் தொடர்ந்து போராடி வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டு வேலைகள், தொழில், வணிகம் தமிழருக்கே! என தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென வலியுறுத்தி இன்று (22.10.2021) வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை பாரிமுனை உயர் நீதிமன்றம் ஆவின்கேட் எதிரில் (என்.எஸ்.சி. போஸ் சாலை – ஆர்மீனியன் தெரு சந்திப்பு) ஒன்றுதிரண்டு, சென்னைத் தலைமைச் செயலகம் நோக்கிப் பேரணியாகப் சென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இப்போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு தோழர்கள் பங்கேற்கின்றனர். ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு தலைமைச் செயலகம் சென்று அரசிடம் இதற்கான கோரிக்கை மனுவையும் அளிக்க இருக்கிறார்கள். அரிய மங்கலத்தைச் சேர்ந்த சோழசூரர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். அவர் தனது மனுவில், நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பணியிடங்களில் வட இந்தியர்கள் பணியமர்த்த படுகின்றார்கள். குறிப்பாக ரயில்வே பணிமனையில் 1765 இடங்களுக்காக வழங்கப்பட்ட அப்ரண்டிஸ் பயிற்சி 1600 பேர் வட இந்தியாவை சேர்ந்தவர்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அப்பகுதியை சேர்ந்த மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டிலும் மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் விதமாக சட்டம் இயற்ற வேண்டும் அல்லது அரசாணை பிறப்பிக்க உத்தரவிடவேண்டும் என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி பல தனியார் துறையிலும் வட இந்தியர்களின் ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் வளர்ந்துவிட்டது. அவர்கள் இந்தி கத்துக்கோங்க ஜி என்று அவ்வபோது பாடமும் எடுக்கிறார்கள். இந்நிலையில் இன்று நடைபெறும் போராட்டத்தில் எதிரொலியாக சமூக வலைதளங்களில் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹேஸ்டேக் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் #TamilNaduJobsForTamils என்ற ஹேஸ்டேக்கும் ட்ரெண்டிங்கில் உள்ளது. பலரும் தங்களது கருத்துகளை இந்த ஹேஸ்டேக் மூலம் பதிவிட்டு வருகின்றனர்.