TN Rains: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை பெய்யப்போகும் மழை! எத்தனை மாவட்டங்கள்? முழு விவரம்
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் மழை மிதமான அளவில் பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காலை 10 மணி வரை மழை:
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காலை 10 மணி வரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அந்த நான்கு மாவட்டங்களில் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கலாம் என்றும், சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது சறுக்கும் சூழல் ஏற்படலாம் என்றும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) September 2, 2024
நீர்நிலைகள் தொடர் கண்காணிப்பு:
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் கனமழை பெய்ததாலும், அங்கு ஏற்பட்ட வெள்ளத்தாலும் அந்த மாநில மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமாக திகழும் இந்த இரு மாநிலங்களிலும் கனமழை பெய்துள்ளதால் தமிழ்நாட்டிலும் வானிலை நிலவரத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளின் நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலம் விரைவில் தொடங்கும் என்பதால் அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.