Tamilnadu Weather: 13 மாவட்டங்களுக்கு இன்று மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் கொடுத்த கூல் அப்டேட் !
தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் ஒரு சில இடங்களில் சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8-ந் தேதி அசானி புயலாக உருவெடுத்தது. இந்த புயல் இன்று பிற்பகலுக்குள் விசாகப்பட்டினம் – காக்கிநாடு இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், வங்கக்கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி புயல் வலுவிழந்த புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புயல் கரையை கடக்கும்போது ஆந்திர கடலோர பகுதியில் மணிக்கு 95 கி.மீ. வேகம் வரையிலும், ஒடிசா கடலோர பகுதியில் மணிக்கு 65 கி.மீ. வேகம் வரையிலும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும்போது மேற்கு வங்காளத்தின் தென்பகுதியில் கனமழை கொட்டித்தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கி.மீ. தொலைவில் அசானி புயல் தற்போது நிலவி வருகிறது. இந்த புயல் நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேலும் வலுவிழக்க உள்ளது.
இன்று அசானி புயல் அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 8 விமானங்கள் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் ஆகும். 9 விமானங்கள் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் ஆகும். விசாகப்பட்டினம் விமானங்கள் 6, விஜயவாடா 4 விமானங்களும், ஹைதராபாத் 2 விமானங்களும், ராஜமுந்திரி 2 விமானங்களும்,பெங்களூா், ஜெய்ப்பூர், கொல்கத்தா தலா ஒரு விமானங்கள் வீதம் மொத்தம் 17 விமானங்கள் ரத்து என்று இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்