TN Weather Update: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை; வானிலை மையம் கொடுத்த அப்டேட்
தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நியில், அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
இன்று 6 மாவட்டங்களில் கனமழை
வானிலை மைய தகவலின்படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வரும் 12-ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நாளை(08.10.25)
இதேபோல், நாளை, கோவை மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
09.10.25
வரும் 9-ம் தேதி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
10.10.25
இதேபோல், வரும் 10-ம் தேதி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில், இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழை
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக, தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அநேக இடங்களில் மழை பெய்தது. நேற்று காலையுடன் மழை முடிந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் 14 சென்ட்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அடுத்தபடியாக, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் 9 சென்ட்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















