Annamalai: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு - காரணம் என்ன?
வடமாநில தொழிலாளர்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்கள் குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது கலவரத்தை தூண்டுதல், வதந்தி பரப்புதல், மோதல் ஏற்படும் வகையில் பேசுதல், குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக தவறான கருத்தை பதிவு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகார் பாஜக ட்விட்டர் பிரிவு மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கலகம் செய்யத்தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அண்ணமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரவிய நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகள் பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது. தமிழகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, உற்பத்தித் தொழில் சேவைத் துறை மற்றும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளில், வட இந்தியத் தொழிலாளர்களின் பெரும் பங்கினை நாங்கள் உணர்ந்தே இருக்கிறோம். வட இந்திய நண்பர்களுக்கு எதிரான பிரிவினைவாதத்தையும், வெறுப்புப் பிரச்சாரத்தையும், தமிழர்களாகிய நாங்கள் ஆதரிக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் “வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் , அனைத்து மக்களையும் வரவேற்று அரவணைத்து அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக கொண்டிருக்கிறது. வட இந்திய சகோதர சகோதரிகளின் பங்களிப்பை ஏற்றுக் தமிழ்நாட்டின் பொது மக்கள் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்றனர் ஆகவே, தமிழகத்தில் வட இந்திய சகோதர சகோதரிகள் தாக்கப்படுவதாக பொய்ச் செய்திகள் பரப்பப்படுவதை, தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இது போன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புவோர் மீது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனவும் கூறியிருந்தார்.
அந்த அறிக்கையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கி, அமைச்சர்கள் பொன்முடி, மூர்த்தி, எம்.பி., தயாநிதி மாறன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வட இந்திய மக்களை ஏளனமாக பேசியதாகவும் குறிப்பிட்டு திமுகவையும், தமிழ்நாடு அரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.