TN Rain: வடகிழக்கு பருவமழை கணக்கீடு நிறைவு.. தமிழ்நாட்டில் மழை நிலவரம் அமோகமா..? அவலமா..?
நடப்பாண்டிற்கான வடகிழக்கு பருவமழைக்கான மழை கணக்கிடும் பணி இன்றுடன் முடிந்ததாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை:
நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை 477 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 45 சதவிகிதம் அளவிற்கு கூடுதலாகும். சென்னையில் 437 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 2 சதவிகிதம் அளவிற்கு கூடுதலாகும். இதே போல் வடகிழக்கு பருவமழை 445 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 01 சதவிகிதம் அளவிற்கு அதிகம். சென்னையில் 924 மி.மீ பெய்துள்ளது. அதன்படி, சென்னையில் இயல்பை விட 14 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் மழை பெய்துள்ளது.
Rainfall over Tamilnadu, Puducherry & Karaikal during 2022 -
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 31, 2022
Southwest monsoon season: +45%
Northeast monsoon season: +1%
Annual rainfall: +22% pic.twitter.com/e38eehQGjn
இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல், டிசம்பர் 31ம் தேதி வரையிலான ஓர் ஆண்டின் முழு காலத்தில், தமிழகத்தில் மொத்தம் 1131 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பை விட 22 சதவிகிதம் அளவிற்கு அதிகமாகும். சென்னையில் இந்தாண்டு மொத்தம் 1447 மி.மீ மழை பெய்துள்ளது இது இயல்பை விட 7% கூடுதலாகும்.
அதேநேரம், முந்தைய ஆண்டில் வழக்கத்தை விட 57 சதவிகிதம் அளவிற்கு கூடுதல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் ஆண்டு சராசரி மழை அளவு 925 மி.மீ எனவும், இதே போல் சென்னையின் ஆண்டு சராசரி 1350 மி.மீ எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை
முன்னதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பின்படி, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
01.01.2023 மற்றும் 02.01.2023: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
03.01.2023 மற்றும் 04.01.2023: தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.





















