Durai Murugan On Mekadatu: மேகதாது விவகாரம் - கர்நாடகாவுடன் பேச முடியாது; அடுத்த மூவ் இது தான் - அமைச்சர் துரைமுருகன் அதிரடி
மேகதாது அணை விவகாரத்தில் இனி கர்நாடகா உடன் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என அமைச்சர் துரைமுருகன் அதிரடியாக பேசியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் இனி கர்நாடகா உடன் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என, அமைச்சர் துரைமுருகன் அதிரடியாக பேசியுள்ளார்.
மேகதாது பிரச்னை:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்திற்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் என்பதால் மாநில அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை பொருட்படுத்தாத கர்நாடக அரசு மேகதாது அணை கட்டியே தீருவோம் என தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வர, தமிழக அரசும் அதை எதிர்த்து சட்டரிதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
மீண்டும் வெடிக்கும் பிரச்னை:
இந்நிலையில் தான், கர்நாடகாவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதையடுத்து துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி என பேசி சளசளப்பை ஏற்படுத்தினார். இதற்கு தமிழக அரசு சார்பில் மட்டுமின்றி அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மத்திய அரசை நாடிய கர்நாடகா:
இந்த நிலையில் தான் அண்மையில் டெல்லி சென்ற டி,கே. சிவக்குமார் மத்திய நீர்வள அமைச்சரை சந்தித்து, மேகதாது அணை கட்டுவது தொடர்பான திட்டத்தை விளக்கியுள்ளார். அப்போது, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும், கர்நாடக அரசின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மற்றும் நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
குவிந்த எதிர்ப்புகள்:
இதுதொடர்பான தகவலகள் வெளியானதுமே தமிழகத்தில் இருந்து கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் குவிந்தன. கர்நாடகாவின் செயல்பாட்டிற்கு தமிழக அரசு உரிய பதிலடி தர வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆளும் திமுக உடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கொண்டு, தமிழக மக்களை ஏமாற்றுவதாக அதிமுக மற்றும் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் சாடின.
கர்நாடகா உடன் பேச்சுவார்த்தை இல்லை - துரைமுருகன்:
இதுதொடர்பாக தமிழக நீர்வள அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டபோது “மேகதாது விவகாரம் குறித்து முதலமைச்சருடன் இன்று காலை ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அதன்பிறகு டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரியத்திலும் ஆலோசிக்க இருக்கிறேன். காவிரி நதி நீர் விவகாரத்தை கையாளும் பொறுப்பை காவேரி மேலாண்மை வாரியத்திடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்து விட்டது. எனவே வழக்கு தீர்ந்து இதுதான் முடிவு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவின் நிலைமை என்ன, நீர் நிலமை என்ன என்பதெல்லாம் எனக்கு தெரியாது. இருந்தாலும் நாங்கள் கர்நாடகாவிடம் போய் பேச முடியாது. அப்படி பேசுவது சட்டப்படி தவறு. இந்த விவகாரத்தை கவனிப்பதெற்கென்று உச்ச நீதிமன்றத்தில் வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. எனவே காலையில் முதலமைச்சரை சந்தித்து விட்டு டெல்லி சென்று காவேரி மேலாண்மை ஆணைய அதிகாரிகளை சந்திப்பேன். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட எந்த காரணத்தை கொண்டும் தமிழகம் அனுமதி கொடுக்காது. சட்டப்படியும் அது முடியாது" என பதிலளித்தார்.