Watch Video: ”அந்த வார்த்தை வேண்டும் ஐயாவுக்கு..” சபாநாயகர் கேள்விக்கு சிரிப்பலையை ஏற்படுத்திய எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்!
சட்டப்பேரவையின் மூன்றாம் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் அரசின் 2 தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
தமிழ்நடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சட்டப்பேரவையின் மூன்றாம் நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் அரசின் 2 தனித் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
அந்த தீர்மானங்கள் பின்வருமாறு:
முதல் தீர்மானம்:
வருகின்ற 2026க்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ” தொகுதி வரையறை என்ற பெயரில் எந்த காரணத்துக்காவும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. தொகுதி வரையறை என்ற பெயரில் எந்த காரணத்துக்காவும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது. இது தென்னிந்திய மாநிலங்களின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது. இந்த 2 திட்டங்களும் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி முறைக்கு எதிரானது” என தெரிவித்தார்.
2வது தீர்மானம்:
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டம் மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால், இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்பட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அவர், “இந்த திட்டம் மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்லாமல் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத ஒன்றாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்பு சட்டத்தில் வகுக்கப்படாத ஒன்று. நாடாளுமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நாடு முழுவதும் நடத்த முடியாத சூழல் உள்ளது. இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது இயலாத ஒன்றாகும்” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து 2 முக்கிய தீர்மானங்கள் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்தி வந்தது. விவாதத்தின்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர், “பேரவை தலைவர் அவர்களே! இன்று சட்டமன்றத்தில் 2 தனித்தீர்மானங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. முதல் தீர்மானம் தொகுதியுடைய மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையிலான மாற்றங்கள் என்பது குறித்தது. ஒட்டுமொத்தமாக ஒரு பறவை பார்வையில் பார்க்கின்றபோது தென்மாநிலங்கள் பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதாலும் சிறப்பான இடத்தை அடைந்திருக்கிறார்கள். நாளை அதாவது வருங்காலத்தில் இந்த எண்ணிக்கைகள் குறைகின்றபோது, நமக்கான குரல்கள் அங்கு ஒலிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுமோ என்ற அச்சம் நியாயமானது. பாரதீய ஜனதா கட்சி அந்த தீர்மானத்தை பொறுத்தவரை கவலையை புரிந்துகொள்கிறோம். அதற்கான என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதற்கு பாரதீய ஜனதா கட்சி முழுமையாக அந்த தீர்மானத்தின் கவலையை புரிந்துகொண்டு அதில் நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “ஆதரிக்கிறீங்க அதனே” என கேள்வி எழுப்பினார். உடனடியாக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “ அந்த வார்த்தை வேண்டும் ஐயாவுக்கு” என்று சொன்னவுடன் சட்டப்பேரவையில் சிரிப்பலை சிறிதுநேரம் தொடர்ந்தது.