TN Headlines: ஐ.பி.எல். பைனல் - களைகட்டும் சேப்பாக்கம்; கருணாநிதிக்கு முதலமைச்சர் புகழாரம் - இதுவரை நடந்தது!
TN Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
IPL 2024 Closing Ceremony: ஐபிஎல் நிறைவு விழா - இமேஜின் டிராகன்ஸ் இசை நிகழ்ச்சி.. களைகட்டும் சேப்பாக்கம்
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் ஏற்கனவே இரண்டு முறை சாம்பியானான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, ஒருமுறை சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோப்பையை வெல்ல கிடைத்துள்ள வாய்ப்பை சாதகமாக்க, இரு அணி வீரர்களும் மல்லுக்கட்ட உள்ளனர்.
"ஜனாதிபதிகளையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுத்தவர்" கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா.. ஸ்டாலின் புகழாரம்!
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுகவினருக்கு அக்கட்சியின் தற்போதைய தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "நம் இதயத்துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கருணாநிதி. அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார்.
Kanchipuram Chariot Festival: "கோவிந்தா கோவிந்தா " 79 அடி பிரம்மாண்டம்..! மக்கள் அலையில் மிதந்து வந்த திருத்தேர்..!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் 7ம் நாள். முக்கிய உற்சவமான திருத்தேர் உற்சவம் துவங்கி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். 5 நிலைகள் கொண்ட 79 அடி உயர திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி காட்சி அளித்த படி பவனி வரும் வரதராஜ பெருமாள்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 784 கன அடியில் இருந்து 575 கன அடியாக குறைந்தது.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 1,061 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 784 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 575 கன அடியாக குறைந்துள்ளது.
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு !
மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை மே மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) ஜூன் 3, 10, 17, 24, 31 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு இரவு 08.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
அரசு இசைப்பள்ளியில் 2024-2025 கல்வியாண்டுக்கான மாணவர்சேர்க்கை தொடக்கம்...
தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களும் முறையான இசைக்கல்வி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் அயல்நாடு மற்றும் நமது நாட்டிலும் இசை, நடனத்திற்கென ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான வேலைவாய்ப்புகளும் அனைத்து மாவட்ட மக்களுக்கும் சரிசமமாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும் மாவட்டம் தோறும் இசைப்பள்ளிகள் தமிழக அரசினால் தொடங்கப்பட்டது.