TN Headlines: 2 நாட்களுக்கு மழை பெய்யும்; ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன விஜய் - முக்கியச் செய்திகள்!
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் இதுவரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
மக்களவையில் திருமாவளவன் கேட்ட கேள்வி.. பேசும்போதே மைக் ஆஃப் செய்த சபாநாயகர் - குவியும் கண்டனம்
மக்களவைவில் திருமாவளவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, மைக் அணைக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பல்வேறு மசோதாக்களை பண மசோதா என்று ஆளுங்கட்சி கடந்தமுறை அறிமுகப்படுத்தியது. எது பண மசோதா என்று தீர்மானிக்கும் அதிகாரம் உங்களிடம் மட்டும் தான் உள்ளது. அந்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய ஆளுங்கட்சி, மீண்டும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளும். அதற்கு நீங்கள் ஒருபோதும் வளைந்து போகக் கூடாது என வேண்டுகோளாக வைக்கிறேன். (நேரம் ஆகிவிட்டது அமருங்கள் என சபாநாயகர் அடுத்தடுத்து இரண்டு முறை வலியுறுத்தினார்) திருமாவளவன் பேசிக்கொண்டு இருக்கும்போதே, மைக் ஆஃப் செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், சபாநாயகர் நடுநிலையும் செயல்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல் காந்திக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “டிவிட்டர் பதிவில், ” இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் எதிர்க்கட்சி தலைவராக ஒருமனதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள, மாண்புமிகு திரு ராகுல் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள். நமது நாட்டு மக்களுக்கு சேவை செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என விஜய் குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த, ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு. சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என அரசு செயல்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு தான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அப்படி நடத்தும்போது சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசினார்.
ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர்
நில அபகரிப்பு வழக்கில் தேடப்பாடும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை கைது செய்ய, சிபிசிஐடி போலீசார் வடமாநிலத்திற்கு விரைந்துள்ளனர்.போக்குவரத்து அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் 7 பேர் மீது, ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. இதில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என்பதால் முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12-ந்தேதி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. அதன் முடிவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய, வழக்கு விசாரணை செய்து வரும் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குடையோடு ரெடியாகு! அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
தமிழ்நாட்டில் வருகின்ற ஜூன் 28ம் முதல் ஜூலை 2 வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.