IAS Transfer: இரவோடு இரவாக ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசு - 4 துறை செயலாளர்கள் உட்பட 7 பேர் மாற்றம்
IAS Transfer: உணவு மற்றும் வேளாண்துறை செயலாளர்கள் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
IAS Transfer: பல்வேறு துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
அதிகாரிகள் பணியிட மாற்றம்:
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கை பேணிக்காப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நிர்வாக சீர்திருத்தங்களுக்காக பல்வேறு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது மேலும் 7 ஐஏஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்:
இதுதொடர்பான உத்தரவின்படி,
- சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆக இருந்த ரமேஷ் சந்த் மீனா, திட்டங்கள் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்
- தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனரான சோபனா, எழுதுபொருள் அச்சுத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்
- சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரியாக இருந்த கவிதா ராமு, தமிழ்நாடு கைவினைகள் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்
- வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த அபூர்வா, வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
- வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறையின் செயலாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
- கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த ஜெகநாதன், வணிகவரித்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்
- விழிப்பு பணி ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையர் கோபால் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் நடவடிக்கைகள்:
கடந்த வாரம் கரூர், திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். அதோடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளராக இருந்த குமரகுருபரன் ஐஏஎஸ், வணிக வரித்துறை செயலாளராக இருந்த தீரஜ் குமார் ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குநராக இருந்த சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் ஆகியோரும் மாற்றம் செய்யப்பட்டனர். அதற்கு முன்னதாக, திருவாரூர், தென்காசி, நீலகிரி, கரூர், kகன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 16 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு டிஜிபியாக இருந்த கே.வன்னிய பெருமாள் , தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலராக இருந்த ஐ.ஜி. பி.கே.செந்தில் குமாரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையராக இருந்த மகேஷ்வரி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி திஷா மித்தல் ஆகியோரும் அடங்குவர்.