Tamil Nadu Full Lockdown: ஊரடங்கு தொடர்பா உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கா? இதோ தெளிவான பதில்கள்!
தமிழ்நாட்டில் வரும் மே 10ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு முழு ஊடரங்கு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது மே 10 காலை 4 மணி முதல் மே 24 காலை 4 மணி வரை இந்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. இருந்தும் தொற்று எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளது.
இந்நிலையில் இந்த ஊடரங்கு தொடர்பாக நமக்கு நிறையே கேள்விகள் எழுந்துள்ளன. அவற்றில் சிலவற்றையும் அதற்கான பதில்களையும் பார்ப்போம்.
கே. பால்,காய்கறி, இறைச்சி கடைகள் இயங்குமா?
ப. பல சரக்கு கடைகள், மளிகை கடைகள், மீன் மற்றும் இறைச்சி கடைகள் அனைத்தும் மே 10ஆம் தேதி முதல் அனைத்து நாட்களிலும் மதியம் 12 மணி வரை இயங்கும்.
கே. மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து செய்யலாமா?
ப. திருமணம், உறவினர்களின் இறப்பு, நேர்முக தேர்வு வேலை வாய்ப்பு மற்றும் மருத்துவம் சார்ந்த அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் உரிய ஆவணங்களுடன் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.
கே. ஸ்விகி, சொமேடோ உணவு டெலிவரி உண்டா?
ப. ஸ்விகி மற்றும் சொமேடோ ஊழியர்கள் ஓட்டலில் இருந்து உணவு டெலிவரி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
கே. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் டெலிவரி உண்டா?
ப. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட இ டெலிவரி மையங்களிலிருந்து மளிகை பொருட்கள் மட்டும் மதியம் 12 மணி வரை டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மின்சாதன பொருட்கள், வீட்டு உபகரண பொருட்கள் உள்ளிட்ட மற்ற பொருட்களை டெலிவரி செய்ய அவர்களுக்கு அனுமதி இல்லை.
கே. கட்டட பணிகளுக்கு அனுமதி உள்ளதா?
ப. ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வரும் கட்டட பணிகளுக்கு முழு ஊரடங்கில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கே. ரயில் மற்றும் விமான சேவைகள் இயங்குமா?
ப. மத்திய அரசு அனுமதித்த வழித்தடங்களில் ரயில் மற்றும் விமான போக்குவரத்து வழக்கம் போல் இயங்கும். இங்கு செல்ல பயணிகள் உரிய பயணச்சீட்டு வைத்திருந்தால் அனுமதி அளிக்கப்படுவார்கள்.
கே. நியூஸ் பேப்பர், கூரியர் உள்ளிட்டவை வருமா?
ப. தினசரி பத்திரிகைகள் வீட்டிற்கு விநியோகம் செய்தல் மற்றும் தனியார் தபால் சேவை கோரியர் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கே. இ-பதிவு யாரெல்லாம் செய்ய வேண்டும்?
ப. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்கள் https.//eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
கே. பத்திர பதிவு மற்றும் நிலம் வாங்க விற்க முடியுமா?
ப. முழு ஊரடங்கு காலத்தில் நிலம் வாங்க விற்க மற்றும் பத்திர பதிவு ஆகியவற்றை செய்ய முடியாது. ஏனென்றால் மிகவும் அத்தியாவசியமான அரசு துறைகள் தவிர மற்ற துறைகள் செயல்படாது.
கே. ஜஸ்கிரீம், ஜூஸ் கடைகள் திறக்கப்படுமா?
ப. காய்கறி, மளிகை,இறைச்சி கடைகள் தவிர வேறு எந்த கடைகளுக்கும் அனுமதி இல்லை. எனினும் ஓட்டல்களில் ஐஸ்கிரீம், ஜூஸ் உள்ளிட்டவை விற்க தடையில்லை.
கே. ஓட்டல்கள் எப்போது திறந்து இருக்கும்?
ப. முழு ஊரடங்கு நேரத்தில் ஓட்டல்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரையும், மதியம் 12 மணி முதல் 3 மணி வரையும், இரவு 6 மணி முதல் 9 மணி வரையும் ஓட்டல்கள் இயங்கும். இங்கு அனைவரும் பார்சல் வசதி மட்டுமே பெற்று செல்ல முடியும். ஓட்டலில் அமர்ந்து உணவு அருந்த தடை தொடர்கிறது.
கே. விவசாயம் சார்ந்த பணிகள் மேற்கொள்ள முடியுமா?
ப. விவசாயம் சார்ந்த பணிகள் மற்றும் விவசாய பொருட்களின் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வேளாண் உரம் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி மதியம் 12 மணி வரை திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கே. சமையல் எரிவாயு டெலிவரி வருமா?
ப. ஊரடங்கு நேரத்தில் சமையல் எரிவாயு டெலிவரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கே. ஊரடங்கு நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த முடியுமா?
ப. ஊரடங்கு நேரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த எந்தவித தடையும் இல்லை.
கே. திருமணங்கள் நடைபெற அனுமதி உண்டா? எத்தனை பேருக்கு அனுமதி?
ப. ஊரடங்கு நாட்களில் திருமணங்கள் நடத்த எந்தவித தடையும் இல்லை. திருமணத்திற்கு ஏற்கெனவே கொடுத்திருந்த அறிவுறுத்தலின்படி 50 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
கே. இறுதி ஊர்வலங்களில் கலந்து கொள்ள எத்தனை பேருக்கு அனுமதி?
ப. உறவினர்கள் இறப்பு மற்றும் அவர்களின் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதற்கு 20 பேர் வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கே. சிறு,குறு தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி உள்ளதா?
ப. சிறு குறு தொழில்துறை நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.
கே. தொழிற்சாலைகள் இயங்குவதற்கு அனுமதி உண்டா?
ப. அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் தவிர இதர தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை. இந்த அத்தியாவசிய தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் சொந்த வாகனங்கள் மற்றும் நிறுவனங்களின் வாகனங்களை பயன்படுத்தலாம்.