Crop Insurance: அப்பாடா.! டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியான அறிவிப்பு; பயிர் காப்பீட்டு செய்ய அரசு அவகாசம்
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீடு செய்யும் தேதியை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அது எந்த தேதி வரை தெரியுமா.?

விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு இன்று கடைசி நாளாக இருந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீட்டு தேதியை நீட்டித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த மாத இறுதி வரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம்.
இன்று முடிவடைய இருந்த பயிர் காப்பீட்டு தேதி
டெல்டா மாவட்டங்களில், சம்பா மற்றும் தாளடி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆண்டுதோறும் பருவமழை காலங்களில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டில், விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இன்றே(15.11.25) கடைசி நாள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனால், விவசாயிகள் மும்முரமாக பயிர் காப்பீடு செய்து வந்தனர்.
காப்பீடு செய்ய முடியாமல் தவித்த ராமநாதபுரம் விவசாயிகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதில், மழை பாதிப்பு, இயற்கை சீற்றங்களால் மகசூல் பாதிக்கப்படும் போது, தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு தொகை தான் விவசாயிகளுக்கு உதவுகிறது.
இந்நிலையில், தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வருவதால், கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகள் பயிர் காப்பீட்டு சார்ந்த ஆவணங்களை பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனிடையே, திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் 26 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாளாக இருந்ததால், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், சர்வர் கோளாறு காரணமாக, விவசாயிகள் தங்கள் விண்ணப்பங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்க முடியாமல் அவதியடைந்தனர்.
இதையடுத்து, நெற்பயிர் காப்பீட்டு பதிவு தேதியை நவம்வர் 30-ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்க தலைவர் பாக்கியநாதன் கோரிக்கை வைத்தார்.
பல்வேறு பகுதிகளிலிருந்தும் அரசுக்கு கோரிக்கை வைத்த விவசாயிகள்
இத்துடன், பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்க வேண்டுமென பல்வேறு இடங்களிலிருந்தும் விவசாயிகள் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. டெல்டா மாவட்டங்களில் பல காரணங்களால் இன்னும் அதிகளவு விவசாயிகள் காப்பீடு செய்யாமல் உள்ளனர். அதனால் காப்பீடு செய்யும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
நவம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கிய தமிழ்நாடு அரசு
இப்படிப்பட்ட சூழலில், அனைத்து தரப்பு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் 30-ம் தேதி வரை பயிர்க் காப்பீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.





















