TN Lockdown Update: புதிய விதிகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு: முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!
ஒருநாள் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருவதை அடுத்து தொற்றுப்பரவலை கட்டுப்படுத்துவது மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதத்திலிருந்து, கொரோனா தொற்று எண்ணிக்கைத் தாக்கம் குறையத் துவங்கியது. இறப்பு எண்ணிக்கையும் கட்டுக்குள் வரத்தொடங்கியது. ஆனால் கடந்த சில தினங்களாக பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது மூன்றாம் அலைக்கான எச்சரிக்கையா அல்லது இரண்டாம் அலையே மீண்டும் மீண்டும் தலைதூக்குகிறதா என்கிற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இதற்கிடையே கூடுதல் தளர்வுகளின்றி எதுவுமில்லாமல் நடைமுறையில் இருந்த ஊரடங்கினை வருகின்ற ஆகஸ்ட் 9ந் தேதி காலை 6:00 மணி வரை நீட்டித்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.
தொடர்ந்து நோய் பாதிப்பு அதிகரித்துவருவதால் மாவட்ட வாரியாக சில கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகிறார்கள். தேனி மாவட்ட ஆட்சியர் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் நபர்கள் தடுப்பூசி போட்டதற்கான ஆவணத்துடன் தான் மாநில எல்லைக்குள் நுழைய வேண்டும் என அறிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியரும் இதுபோல அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநில எல்லைகளில் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் நெறிக்கப்பட்டாலும் மற்ற மாவட்டங்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாதது மக்களைக் குழப்பமடையச் செய்துள்ளது.
மேலும் நேற்றைய ஒரு நாள் நிலவரப்படி 1997 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் உயிரிழப்பு எண்ணிக்கையும் 33 என அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிப்பதற்கு முன்பு அரசு சுதாரித்துக் கொண்டு அதைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், கொரோனாவை பாதிப்பைக் கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு செய்வதற்காக, தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. முதல்வர் தலைமையில் இன்று காலை 11:30 மணிக்கு நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில், சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, சி.எஸ்.ஆர் நிதியை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கும் திட்டத்தை சென்னையில் 28ந் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஜூன் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளமயமாக்கப்பட்ட தடுப்பூசிக் கொள்கையின் கீழ், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் 75 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்குகிறது. மீதமுள்ளவை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்றன. அவை பணம் செலுத்தும் நபர்களுக்கு தடுப்பூசி போடப் பயன்படுகிறது. இருப்பினும், தனியார் மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி குறைந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் முதன் முறையாக தமிழ்நாட்டில் தனியார் மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில், சி.எஸ்.ஆர் நிதியை பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், " இத்திட்டம் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படவுள்ளது. இதுவரை, ரூ.5 கோடிக்கும் அதிகமாக நிதி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது