Free Breakfast Scheme: மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டம்..! மதுரையில் தொடங்கி வைத்த முதல்வர்..!
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் அரசுப்பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை, நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
#LIVE: பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் காலை உணவுத் திட்டம் தொடக்கம் https://t.co/Vk54sVMPTT
— M.K.Stalin (@mkstalin) September 15, 2022
அந்த பள்ளியில், காலை சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார். அதற்கு முன்பு, மதுரை நெல்பேட்டையில் உள்ள காலை சிற்றுண்டிகள் தயாரிக்கும் உணவுக்கூடத்திற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு தயார் செய்யப்பட்டிருந்த சிற்றுண்டிகளை சுவைத்துப் பார்த்து ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டின் மறைந்த முதல்வரான அண்ணாவின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான இந்த சிற்றுண்டி உணவுத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தின் முதல் பிரதியை கோவை வடிவேலம்பாளையம் கமலாத்தால் பாட்டி முதல்வர் கையால் பெற்றார்.
#LIVE: பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மதுரை, நெல்பேட்டையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மலர் மரியாதை https://t.co/kcqgjZMBU5
— M.K.Stalin (@mkstalin) September 15, 2022
முன்னதாக, மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணாசிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவுத்திட்டம் முதற்கட்டமாக 1,545 அரசுத் தொடக்கப்பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர், படிப்படியாக இந்த சிற்றுண்டித் திட்டம் அனைத்து வகுப்புகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
சிற்றுண்டி திட்டத்தில் வழங்கப்பட உள்ள உணவுகள்
* திங்கட்கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)
* செவ்வாய்க்கிழமை - கிச்சடி வகை ( ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி)
* புதன்கிழமை - பொங்கல் (வெண் பொங்கல், ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார்)
* வியாழக்கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)
* வெள்ளிக்கிழமை - ஏதாவது ஒரு வகை கிச்சடி(ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி) உடன் ரவா கேசரி, சேமியா கேசரி