CM MK Stalin: "உங்களுக்கே தெரியும் பிடிஆர்.. பலவீனமாகிட கூடாது" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வாதம் நமக்கு பலவீனமாக மாறிவிடக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பதவி வகிப்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இவரது தாத்தாவும் சுதந்திரத்திற்கு முந்தைய மெட்ராஸ் மாகாணத்தில் அமைச்சராக பொறுப்பு வகித்தவருமான பிடி ராஜன் பற்றிய புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது.
பிடிஆருக்கு மு.க.ஸ்டாலின் அட்வைஸ்:
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ப்ல்வேறு விஷயங்களை பேசினார். அப்போது குறிப்பாக, பழனிவேல் தியாகராஜன் அறிவார்ந்த வாதங்களை வைக்கக்கூடியவர். அவரது சொல்லாற்றால் அவருக்கு பலமானதாக மட்டுமே இருக்க வேண்டும்.
பலவீனமாக மாறிவிடக் கூடாது. இதை ஏன் சொல்கிறேன் என்று அவருக்குத் தெரியும். என் சொல்லை தட்டாத அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். என் அறிவுரையின் அர்த்தத்தையும், ஆழத்தையும் நிச்சயம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
அதிருப்தியை காட்டிய பிடிஆர்:
சட்டசபையில் நேற்று நடந்த நிகழ்வின் எதிரொலியாகவே முதலமைச்சரின் இந்த அறிவுரை எதிரொலித்துள்ளது. அதாவது சட்டசபைக் கூட்டத்தொடரில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் பொன்ஜெயஸ்ரீராம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது துறைக்கு போதிய அளவு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும், மற்ற மாநிலங்களைப் போல அனைத்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் தங்கள் துறையின் கீழ் வரவில்லை, டைட்டல் பார்க் போன்றவை தொழில்துறையின் கீழ் வருகிறது என்று கூறியதுடன், யாரிடம் அதிகாரமும், திறனும், நிதியும் இருக்கிறதோ அவர்களிடம் கேளுங்கள் என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
சட்டசபைக் கூட்டத்தில் எதிர்க்கட்சியினர் முன்னிலையிலே ஆளுங்கட்சியின் முக்கிய அமைச்சர் தொழில்துறை மற்றும் நிதித்துறை மீது தனது அதிருப்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தியது பெரும் விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியது. ஏற்கனவே பிடிஆரிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டு அவருக்கு பதிலாக தங்கம் தென்னரசு நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல் நேரத்தில் இப்படியா?
கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் முக்கிய தலைவர்கள் சிலர் மீது பிடிஆர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்றைய சம்பவம் இதை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது. அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வரும் நிலையில், பிடிஆர் தனது அதிருப்தியை சட்டசபையில் வெளிப்படுத்தியது முதலமைச்சருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாகவே இன்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.





















