(Source: ECI/ABP News/ABP Majha)
திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம்... முதலமைச்சர் அறிவிப்பு
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாய் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூரில் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்ச ரூபாய் வழங்குமாறும், மேலும் சிகிச்சையில் உள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
முதலமைச்சர் இரங்கல்
இதுகுறித்து முதலமைச்சர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ராக்கியாபாளையம் கிராமம், மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில், மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 6.10.2022 அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்.
View this post on Instagram
உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
காப்பகத்தில் கெட்டுப்போன உணவு
திருப்பூர் அருகே அவினாசி, பூண்டி ரிங் சாலையில் உள்ள விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட மூன்று மாணவர்கள் முன்னதாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இக்காப்பகத்தில் மொத்தம் 15 சிறுவர்கள் தங்கியிருந்த நிலையில், ஒரு சிறுவர் ஆயுத பூஜை காரணமாக வீட்டுக்கு செல்ல, மீதி சிறுவர்கள் நேற்று முன் தினம் (அக்.05) இரவு லட்டு, ரசம் உண்டுள்ளனர்.
தொடர்ந்து அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட நேற்று காலை சிற்றுண்டி உண்டதும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
3 சிறுவர்கள் உயிரிழப்பு
இதனையடுத்து சிறுவர்கள் அனைவரும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை செல்லும் வழியிலேயே மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர்.
மற்ற சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் திருப்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சிறுவர்களின் மரணம் தொடர்பாக விசாரிக்க 5 குழுக்கள் அமைத்து அமைச்சர் கீதா ஜீவன் முன்னதாக உத்தரவிட்டுள்ளார்.
மூடப்பட்ட காப்பகம்
முன்னதாக விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், சாமிநாதன் ஆகியோர் ஆய்வு செய்த நிலையில், சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன், ஆட்சியர் வினீத், காவல் ஆணையரும் உடனிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், ”கெட்டுப்போன உணவு உண்டு 3 சிறுவர்கள் இறந்த விவகாரத்தில் திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது. சரியான கண்காணிப்பு இல்லாதது, மெத்தனபோக்கு ஆகியவற்றால் இந்த இறப்பு ஏற்பட்டுள்ளது; எனவே இந்தக் காப்பகம் மூடப்படுகிறது.
ஆதரவற்ற குழந்தைகளின் நிலை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தமடைந்தார். திருமுருகன்பூண்டியில் உள்ள குழந்தைகள் காப்பகம் பாதுகாப்பற்ற இடமாக உள்ளது. காப்பக நிர்வாக செயல்பாடுகளில் அலட்சியமாக இருந்த காப்பக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.