Tamilisai: ”கனிமொழிக்கு பாராட்டுகள்; ஆனால் வாரிசு அரசியல் என்பது அடையாளமாகி போய்விடுமோ”: தமிழிசை
பெண் பதவிக்கு வருவது சிரமமான காரியம், அதற்கு பாராட்டுகள் ஆனால், வாரிசு அரசியல் என்பதுதான் ஒரு அடையாளமாகி போய்விடுமோ என பலர் சந்தேகப்படுவதாக ஆளுநர் தமிழிசை சொந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு, புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவரிடம் திருக்குறள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டதாகவும், அதை மீண்டும் மொழி பெயர்க்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் கூறியது தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆளுநர் தமிழிசை, திருக்குறள் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆராய்ச்சி செய்வதால், அவ்வாறு கூறியிருக்கலாம் எனவும், மீண்டும் மொழி பெயர்க்க வேண்டும் என்ற கருத்தை மதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
”ராஜராஜ சோழனின் வரலாற்றை மறைக்க முயற்சி”
மேலும், தற்போது ராஜராஜ சோழனின் வரலாற்றை மறைக்க முயற்சி நடக்கிறது என்றும், இதைப்போன்று மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுக்கும் வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருக்கலாம் என தெரிவித்தார்.
திமுகவின் துணை பொதுச் செயலாளராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டது தொடர்பாகவும் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, பெண் என்பது பதவிக்கு வருவது சிரமமான காரியம், வந்திருக்கிறார், அதற்கு பாராட்டுகள், ஆனால் ஒன்றே ஒன்று, வாரிசு அரசியல் என்பதுதான் ஒரு அடையாளமாகி போய்விடுமோ என சந்தேகம், ஏனென்றால் அண்ணன்- தலைவர், தங்கை- துணைப் பொதுச் செயலாளர் என தெரிவித்தார்.
”இது எனது கருத்தல்ல”
பல தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி, வாரிசு அரசியலாகிவிடுமோ என பலர் நினைக்க கூடும் எனவும், இது எனது கருத்தல்ல, இவ்வாறு நினைக்க கூடும் என நினைக்கிறேன்” என ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
திமுக தேர்தல்:
இன்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமை கழக பதவிகளுக்கு புதிய நியமனங்கள் நியமிக்கப்பட்டன. அதன்படி, தலைவராக மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர். பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கனிமொழி தேர்வு:
அதேபோன்று, திமுக துணை பொதுச்செயலாளராக ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, திமுகவில் ஐந்து பேருக்கு துணை பொதுச்செயலாளர் பதவிகள் வழங்கப்படும். அதில், எப்போதும் ஒரு பெண்ணுக்கு அப்பதவி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, அந்த பதவியில் இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் கனிமொழி துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் பேசிய கனிமொழி, "1949ஆம் ஆண்டு கழகத்தை தொடங்கிய போது அண்ணா இந்த கழகத்தின் செயல்கள் பெரியாரே போற்றும் வகையில் இருக்க வேண்டும் என்று உரைத்தார். அதே போல் சுயமரியாதை திருமணச் சட்டம் , தமிழ்நாடு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அண்ணாவுக்கு பிறகு பொறுப்பேற்ற கருணாநிதி கழகத்தின் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து செயல்பட்டார்.
பலரின் ஆசையை பொய்யாக்கும் வகையில் வெற்றிடத்தை காற்றாக இல்லாமல் ஆழிப்பேரலையாக நிரப்பியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசியல் வெற்றியை பெற்று, இன்று சனாதன சக்திகளிடம் இருந்து கொள்கைக்கையை காக்க போராடி வருகிறார். இந்தப் போராட்டத்தில் இணைந்து போராட வாய்பளித்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்பா இல்லாத இடத்தில் ஸ்டாலினை பார்க்கிறேன் என கனிமொழி தெரிவித்தார்.
இந்நிலையில், திமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆளுநர் அரசியல் பேசியது பேசு பொருளாக மாறியுள்ளது.