Tamil New Year 2024: முடிந்தது சோபகிருது! நாளை பிறக்குது தமிழ் புத்தாண்டு - தலைவர்கள் வாழ்த்து
Tamil New Year 2024: தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
Tamil New Year 2024: சோபகிருது வருடம் முடிந்து குரோதி தமிழ்ப் புத்தாண்டு நாளை தொடங்குகிறது.
தமிழ்ப் புத்தாண்டு:
தமிழ் மாதங்களில் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். சூரிய பகவான் தனது பயணத்தை மேஷ ராசியில் இருந்து மீண்டும் துவங்குவதையே, தமிழ்ப்புத்தாண்டாக கருதி வருகிறோம். அந்த வகையில், உத்தராயனம் - சிசிர ரிது - பங்குனி மாதம் - 31ம் தேதி - 13.04.2020 - அன்றைய தினம் சனிக்கிழமையும் - சுக்ல பக்ஷ சஷ்டியும் - மிருகசிரீஷ நக்ஷத்ரமும் - சோபன நாமயோகமும் - பாலவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி இரவு மணி 8.26க்கு சோபகிருது வருடம் முடிவடைந்து விருச்சிக லக்னத்தில் ஸ்ரீகுரோதி வருடம் பிறக்கிறது.
இந்த நாள் தென்னிந்தியாவில் தமிழ் வருடப்பிறப்பு, சித்திரை பிறப்பு, சித்திரை விஷூ, சித்திரைக் கனி மற்றும் சங்கராந்தி என பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் தலைவர்கள் வாழ்த்து:
எடப்பாடி பழனிசாமி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மலர இருக்கும் 'குரோதி' ஆண்டு, எல்லா மக்களுக்கும் அன்பையும் நிறைந்த ஆரோக்கியத்தையும், மிகுந்த சந்தோஷத்தையும், பல்வேறு வெற்றிகளையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, உலகம் முழுவதும் வாழும் தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில், எனது நெஞ்சார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
செல்வப்பெருந்தகை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது டிவிட்டர் பதிவில், “ ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த குரோதி வருட தமிழ்ப் புத்தாண்டில் அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது. அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
ராமதாஸ்: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கையில், “தமிழ் மக்களுக்கு அனைத்து வகையான நலங்களும், வளங்களும் கிடைக்க வேண்டும்; அனைத்து மக்களின் வாழ்விலும் நெருக்கடிகள் மறைந்து மகிழ்ச்சி நிறைய வேண்டும். அதற்காக கடுமையாக உழைக்க இச்சித்திரைத் திருநாளில் தமிழர்களாகிய நாம் உறுதியேற்றுக் கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
அன்புமணி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சித்திரை வெற்றிகளையே வழங்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கை. அதை உண்மையாக்கும் வகையில் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்தையும் சித்திரைத் திருநாள் வழங்கட்டும் என்று கூறி, உலகம் முழுவதும் சித்திரைத் திருநாளை கொண்டாடும் தமிழர்களுக்கு எனது உளப்பூர்மான வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.