CM Stalin: 'சிவப்பு கம்பளம் விரித்து தமிழ்நாடு வரவேற்கிறது’ .. ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!
ஜப்பான் நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தார்.
ஜப்பான் நாட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த இரு நாட்கள் சிங்கப்பூரில் இருந்த அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தொடர்ந்து நேற்று இரவு முதலமைச்சர் ஜப்பான் சென்றடைந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொண்டார். அப்போது தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வதற்கும், சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கானபுரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டு நிதி உதவியை பெறுவதற்காக 2008-ஆம் ஆண்டு நான் டோக்கியோ நகருக்கு வருகை தந்ததை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். இரண்டும் மிக மிக முக்கியமான திட்டங்கள். அப்போது ஜப்பானை நம்பி உதவிகள் கேட்டோம் ஜப்பான் நாடு எங்களைக் கைவிடவில்லை.
2010-ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை கூட்டுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது நான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்தேன். ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் மசாயூகி நாஷிமா சென்னைக்கு வருகை தந்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அப்போது சென்னை என்பது ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அதே ஆசிய நாடுகளின் நுழைவாயிலான சென்னையில் இருந்து நான் வருகை தந்துள்ளேன். 'உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024' ஜனவரி 10 மற்றும் 171 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிகழ்வுக்கு கூட்டாளர் நாடாக ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன். இரு நாடுகளுக்கு இடையேயான, பொருளாதார உறவுகள் சமீப காலங்களில் மிகப் பெரும் எழுச்சி கண்டுள்ளது.
இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள். தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் விளங்குகிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.
உயர்ந்த மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த அடிப்படையோடு தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு நீங்கள் பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடும், வரவேற்கிறது” என தெரிவித்துள்ளார்.