தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் மாநில மாநாடு ஒத்திவைப்பு
தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் வைர விழா மாநில மாநாட்டை 38 மாவட்ட வருவாய் துறை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் 75வது ஆண்டு வைர விழாவை கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் வருகின்ற டிசம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதாலும், அங்கு பணியாற்றி வரும் வருவாய் அலுவலர்கள் பேரிடர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.
மீட்பு பணிகள்:
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தநாரி, "தமிழ்நாடு வருவாய்துறை சங்கத்தின் மாநில மாநாடு டிசம்பர் 23, 24 ஆம் தேதி நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. அதற்கான 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. திடீரென தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்து லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டும்.
அங்கு பணியாற்றிக் கொண்டுள்ள வருவாய் துறை ஊழியர்கள் மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நான்கு மாவட்டங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள ஐந்து மாவட்ட வருவாய் துறை ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நடைபெற இருந்த தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தின் வைர விழா மாநில மாநாட்டை 38 மாவட்ட வருவாய் துறை ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்று கூறினார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய்த்துறை பணியாளர்கள் பேரிடர் மேலாண்மை என பதாகைகளை உயர்த்தி குறித்து மக்களுக்கு பணியாற்றி வருவதால் இந்த மாநில மாநாடு ஒத்தி வைக்கப்படுகிறது. வைர விழா மாநில மாநாடு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுகிறது. திட்டமிட்டது போல சென்னையில் ஜனவரி மாதம் தமிழ்நாடு முதல்வர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் விழாவில் பங்கேற்பார்கள். வைர விழா மாநில மாநாட்டிற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். தமிழக வருவாய்த்துறை அலுவலர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் தமிழக அரசுக்கு உதவிடும் வகையிலும் இந்த மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்தார்.