TN Rain Alert: இலங்கைக்கு அருகில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. அடுத்த 3 மணிநேரம் எங்கெல்லாம் மழை..? முழு விவரம்!
தமிழ்நாட்டில் உள்ள கரையோர பகுதிகள், பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்டை நாடான இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள கரையோர பகுதிகள், பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 3 மணிநேரம் எங்கெல்லாம் மழை..?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், கன்னியாகுமரி பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வெளியில் செல்பவர்கள் குடையுடன் செல்வது நல்லது.
இனி வரும் நாட்களில் எங்கு மழை பெய்ய வாய்ப்பு..?
01.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
02.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.11.2023 மற்றும் 05.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனியின் தாக்கம் அதிகரிக்கும்:
நேற்று முதல் இன்று காலை வரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும் பெய்தது. வட கிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் இனி வரும் நாட்களில் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை பெய்த மழை அளவு எடுத்துக்கொண்டால் இயல்பை விட 39% குறைவாக தான் வடகிழக்கு பருவ மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இனி வரும் நாட்களில் பனியின் தாக்கல் நாளுக்குநாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலையே பல்வேறு இடங்களில் பனியின் தாக்கம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.