TN Pongal Gift 2022: டோக்கன் வாங்குங்க.. டைமுக்கு வாங்க.. பொங்கல் பரிசுக்கு அரசின் அறிவுறுத்தல்கள்!
TN Pongal Gift: 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு(pongal parisu thoguppu 2022) அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி வருகிற ஜனவரி 4ம் தேதி முதல் நியாயவிலைக் கடைகளில் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
இந்தப் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய பொருட்களும் கரும்பும் இடம்பெற்றுள்ளது.
1088 கோடி ரூபாய் செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு இந்தப் பரிசு பொருட்கள் வழங்கப்பட இருக்கின்றன.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்றும், அனைத்து ரேஷன் கடை பணியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன.
அவர்களை ஒவ்வொரு நாட்களில் நேரத்தை குறிப்பிட்டு பொங்கல் பரிசு பொருட்களை பெறுவதற்கு வரவழைக்க டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்படுகிறது. தினமும் 200 குடும்ப அட்டைகள் வீதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும். பொதுமக்களை சமூக இடைவெளி, கிருமி நாசினி, முககவசம் போன்றவற்றை கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் கடந்த 2 நாட்களாக நடைப்பெற்று வரும் நிலையில், பொங்கல் பரிசு பொருட்களை இடைவிடாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க, விடுமுறை தினமான ஜனவரி 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் நியாய விலை கடை செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்