காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற முக்கிய அரசியல், சமூக நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
1. சென்னை பிரபல தனியார் பள்ளியில் எழுந்துள்ள பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தை சாதிய பிரச்னையாக மடைமாற்றம் செய்யாது அறிவார்ந்த சமூகமாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரவேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்
2. அடுத்த மாதம் 15 ஆம் தேதி வரை மின்கட்டணத்தை செலுத்தலாம் என தமிழக அரசு அறிவித்தது. 10.05.21 முதல் 31.05.21வரை ( முந்தைய மாத கணக்கீட்டிலிருந்து 60வது நாள் இந்த காலத்தில் இருப்பின் ) மின்கணக்கீடு செய்ய வேண்டியவர்கள், மே2019 ஆண்டில் (கொரோனா இல்லாத காலம்) கணக்கீடு செய்யப்பட்ட தொகையையே உத்தேச தொகையாக கருதி, மின்கட்டணம் செலுத்தலாம். அந்த மாத கணக்கீடு இல்லாதவர்கள் அல்லது மே2019 மாதக் கட்டணம் கூடுதலாக இருப்பதாக கருதுபவர்கள், மார்ச்2021ன் கணக்கீட்டின் படி மின்கட்டணம் செலுத்தலாம் என்றும் தெரிவித்தது.
3. மயிலாடுதுறையில் கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, கருப்பு பூஞ்சையினால் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் கண்கள் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
4. தொடர்ச்சியான கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் குழந்தைகள் திருமணம் அதிகரித்துள்ளதாக சி.ஆர்.ஒய் (CRY) அமைப்பு தெரிவித்துள்ளது.
5. கொரோனா நோயை உருவாக்கும் சார்ஸ்- கோவ்- 19 வைரஸ் உருவானது எப்படி என்பதை, அடுத்த 90 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
6. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,21,300 -க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது.
7. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி குடும்ப அட்டைதாரர்களுக்கு, மூவாயிரம் ரூபாய் கொரோனா இடற்பாட்டு கால நிதியுதவியை அறிவித்துள்ளார்.
8. புதிய வேளாண் சட்டங்களை ரத்துசெய்யக் கோரி, டெல்லியில் ஆறு மாதங்களாக விவசாயிகள் கூட்டமைப்பினர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்தின் மூலம் கொரோனா ஆபத்து உருவாகியுள்ளதாகக் கூறி, டெல்லி, அரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுக்கு தேசிய மனிதவுரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
9 . கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கும் பத்திரிகையாளர் மற்றும் ஊடகத்துறையை சார்ந்த குடும்பத்தினருக்கான இழப்பீட்டுத்தொகை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது. மேலும், ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை, 3 ஆயிரம் ரூபாயில் இருந்து 5-ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
10. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,764 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29,717 பேர் நோய்த் தொற்றில் இருந்து புதிதாக குணமடைந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,10,224 ஆக குறைந்துள்ளது.