TN Rain Alert: பனிப்பொழிவு ஒருபக்கம்.. 10 மணிவரை 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை நிலவரம் என்ன?
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்றும் நாளையும் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதுமட்டுமின்றி அதிகாலை நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு எரியவிட்ட வண்ணம் வாகனங்களை இயக்கி வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம தெரிவித்துள்ளது.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறைப்பனி நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய மூன்று மாதங்கள் குளிர்காலமாகும். இந்த மூன்று மாதங்களும் பகல் நேரங்களில் அதிக வெயிலின் தாக்கமும், இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவும். குறிப்பாக அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் மற்றும் வாகனங்கள் மீது படிந்துள்ள நீர் துளிகள் பனித்துகள்களாக படிந்து உறைப்பனியாக காட்சியளிப்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் தொடர் மழை பெய்த காரணத்தால் குளிர் காலம் தாமதமாகி கொண்டே வந்தது. இதனையடுத்து டிசம்பர் மாதத்தில் மழை இல்லாத இரண்டு நாட்கள் மட்டுமே உறைப்பனி பொழிவு காணப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் மழை தொடங்கியதால் நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவு இன்றி காணபட்டது. இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கடந்த இரண்டு நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் உறைப்பனி தாக்கம் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று காலை உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் உரைப்பணி படிந்து காணப்பட்டது.
இதனால் உதகை குதிரை பந்தைய மைதானம், காந்தள், தலைக்குந்தா , அவலாஞ்சி, அப்பர்பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள புல்வெளி மற்றும் நகரின் அனைத்து பகுதிகளிலும் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல காட்சி அளித்தது. குறிப்பாக நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனங்களின் மீதும் உறை பனி சுமார் அரை அடி அங்குலத்திற்கு உறை பனி படிந்திருந்தது.
உறை பனி பொழிவு காரணமாக உதககை நகரப்பகுதியில் 2.8 டிகிரி செல்சியசும், காந்தல் மற்றும் தலைகுந்தா பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது. இந்த பனி பொழிவு காரணமாக கடுங்குளிர் நிலவுவதால் இரவு 7 மணி முதல் காலை 9 மணி வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது.